கொரோனா இடைவெளியில் டெங்கு!

கொரோனா 2.0 முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலை எதிர்பார்க்கப்படும் சூழலில் கொஞ்சம் மூச்சுவிட இடைவெளி கிடைத்திருக்கிறது என அரசும், அதிகாரிகளும், மருத்துவர்களும் கூடவே மக்களும் நினைத்துக் கொண்டுள்ளனர். இந்த இடைவெளியில் டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் தனது கடையை சத்தமில்லாமல் திறந்திருக்கிறது.

2019ம் ஆண்டு சுமார் 8000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2020 ல் 2000 பேர் என்று குறைந்தது. ஆனால் 2021ல் இந்த 6 மாதத்தில் 2000 பேர் என்று மருத்துவ செய்திக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6800. இதில் தமிழகத்தின் பங்கு மட்டும் 2000 என்பது கவலைக்குரிய, கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி ஆகும்.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று இரண்டு அலைகளால், நொந்து நூலாகி இருக்கும் தமிழக மக்களுக்கு கூடுதல் தலைவலியாக இந்த டெங்கு காய்ச்சல் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக பருவ மழை தொடங்கும் காலங்களில் வரும் நோய்களில் ஒன்றாக இருந்த டெங்கு, இப்போது முன்னதாகவே கைவரிசையை தொடங்கி இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முன்பு பருவமழை தொடங்கும் போது சளி, காய்ச்சல், இருமல் இவற்றுடன் டெங்கு காய்ச்சலும் வந்தது. ஒரு இரத்தப் பரிசோதனையில் கண்டறிந்து இந்த நோய் இனம் காணப்பட்டது. ஆனால் தற்போது காய்ச்சல் என்றாலே “ஓடு, கொரோனா டெஸ்ட் செய்” என்ற நிலையில் கொரோனாவா, டெங்குவா, சாதாரண காய்ச்சலா, இல்லை புதுவகையா என்று மக்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் தொடங்கி இருக்கிறது. அரசாங்கத்துக்கும் இது கூடுதல் பணிச் சுமைதான்.

எனவே, வழக்கமாக நடக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகமாகவும் விரைவாகவும் செய்து இதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் இது தேவையற்ற, கூடுதல் சுமையாக மாறிவிடும். ஏனென்றால் இன்னும் பல லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் அரசு அதற்கு முன்னுரிமை தரவேண்டிய நிலை உள்ளது. வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெருந்தொற்றை எதிர்கொள்ளும்போது கூடுதல் சுமைகளை தவிர்ப்பது நல்லது. மருத்துவத்துறை சார்பில் பெரும் அளவில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட வேண்டும். கூடவே மக்களும் இதுகுறித்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கும் இடங்களில் இந்த டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு, குடித்தனம் நடத்தி ஆயிரக் கணக்கில் முட்டை இடுவது வழக்கம். அதை முழு கவனத்தில் கொண்டு ஓட்டை, உடைசல்களை பொக்கிஷமாக பாதுகாக்காமல் ஓரங்கட்ட வேண்டும். சிறிய டப்பா, தொடங்கி தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் குழி, டயர், பாட்டில் என்று எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அவற்றை எல்லாம் அகற்ற வேண்டும். காலியாக இருக்கும் வீட்டு மனைகள், பொது இடங்களில் உள்ள நீர் தேங்கும் குண்டு குழிகள் எல்லாம் கவனிக்கப்பட வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அந்தந்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் பெருமளவு பரவாமல் தடுக்க முடியும்.

குறிப்பாக இது பகலில் கடிக்கும் கொசு, கூடவே அதிக உயரம் பறக்காமல் சுமார் நான்கு அல்லது ஐந்து அடி உயரத்திலேயே கடிப்பதால் குழந்தைகள் அதுவும் அரைக்கால் பாவாடை, டவுசர் அணிந்த குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு வேளை பள்ளிகளில் வகுப்புகள் நடக்கத் தொடங்கினால் இவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

சிறிது அலட்சியமும் சிக்கலை உண்டாக்கிவிடும். ஏற்கனவே கொரோனா இரண்டாம் அலைக்கும் மூன்றாம் அலைக்கும் இடைவெளியில் இருக்கும் நாம், பட்ட காலிலே படும் என்பதற்கேற்ப நடந்து கொள்ளக்கூடாது.