தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 50வது ஆண்டு உழவிற்கு உயிரூட்டும் கல்விக் களஞ்சியம் !

உலகத்தின் முதல் மனிதனின் முதல் தொழில் விவசாயமாகத் தான் இருந்திருக்கும். காரணம் உணவை தவிர்த்து விட்டு எந்த முன்னேற்றமும் நிகழ்த்திட முடியாது. விவசாயம் தொழிலாக மட்டுமின்றி கல்வியாகவும் இந்தியாவில் மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் வேளாண் கல்லூரியாக 100 ஆண்டுகளும், வேளாண் பல்கலைக்கழகமாக 50 ஆண்டுகளும் கடந்து பசுமை நிறைந்து கோவையின் முக்கிய அங்கமாகவும் அடையாளமாகவும் இருந்து வருகிறது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு சமீபத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இணைய வழியில் நடைபெற்றது. இருப்பினும் இதனை வரும் ஆகஸ்டில் சிறப்பாக கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் செய்துவருகின்றனர். இது குறித்தும் இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், வருங்காலத் திட்டங்கள் பற்றியும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நீ.குமார் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்களைக் காண்போம்.

100 ஆண்டு கடந்த கல்லூரி:

வேளாண்மை பல்கலைக்கழகம் சிறந்த பழமை வாய்ந்த பல்கலைக்கழகம். இது முதலில் வேளாண்மைக் கல்லூரியாக கோவையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1909ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா 2009ம் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது 1971 ல் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பஞ்சாப் வேளாண் கல்லூரியை பார்த்துவிட்டு அதை போல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அதனை மாதிரியாக கொண்டு உருவாக்கினார். இதன் 50 வது ஆண்டு அதாவது பொன்விழா ஆண்டு ஜூன் 1 ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இணையவழியில் கொண்டாடினோம். பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பொன்விழா கொண்டாட்டம்:

தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் மாநில அளவில் விவசாயிகள் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல் சர்வதேச அளவில் மூன்று நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 1972 – 76 ம் ஆண்டில் என்னுடன் படித்த 125 மாணவர்கள் சேர்ந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்காவில் கிரானைட் விவசாயி சிலை ஒன்றை நிறுவவுள்ளோம். இதைபோல் மற்ற முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை திட்டமிட்டுள்ளனர்.

பொன்விழா ஆண்டினை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக மாற்ற பொன்விழா ஆண்டு கட்டிடம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். நிச்சயமாக வேளாண் துறை அமைச்சர் அதனை கருத்தில் கொண்டு அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திடமும் மாணவர்கள் விடுதி சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு வசதிகளை செய்து தர சிறப்பு கோரிக்கை வைத்துள்ளோம்.

முன்னோடி:

இந்தியா முழுவதும் 1950 களில் 60 மில்லியன் டன் நெல் உற்பத்தி தான் இருந்தது. அதனால் பசி, பட்டினி என்று பஞ்சம் நிறைந்திருந்தது. தற்பொழுது 330 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்து முன்னோடியாக இருக்கின்றோம்.

பலவகையான உணவு தானிய ரகங்களும், தொழில்நுட்பங்களும் சேர்ந்து உணவு தானிய உற்பத்தி பெரிதளவில் உயர்ந்துள்ளது. இதுபோக மற்ற காய்கறி, பழ வகைகள் போன்றவற்றில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பொதுவெளியில் வந்துள்ளதால் தான் இது நிகழ்ந்துள்ளது.

லாபமும் வளர்ச்சியும்:

இந்த பல்கலைக்கழகத்தால் என்ன தாக்கம் ஏற்பட்டுள்ளது என கடந்த 2 ஆண்டுகளாக எங்களது பொருளாதார நிபுணர்கள் குழு மேற்கொண்ட கள ஆய்வின் படி, மாவட்ட ரீதியிலான அதிகாரிகளின் தகவல்கள் படி, விவசாயிகளுக்கு கூடுதலாக 10 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கு காரணம் எங்களது தொழில்நுட்ப முறைகள் தான் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கூடுதல் லாபத்திற்கு காரணமாக இருப்பது அதிகப்படியான ரகங்களும், தொழில்நுட்ப முறைகளும், இயந்திரவியலும் தான். இந்த மூன்றும் சேர்ந்து தான் வருடா வருடம் 10 ஆயிரம் கோடி கூடுதல் வருமானத்தை பெற்று தந்துள்ளது. 2018 – 2019ம் ஆண்டு தகவலின் அடிப்படையில் மட்டுமே இந்த அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 மற்றும் 20, 21ம் ஆண்டின் புள்ளிவிவரத்தை பார்த்தால் இந்த கூடுதல் லாபம் மேலும் கூடியிருக்கும்.

இந்த விவசாய தொழில்நுட்ப முறையும், பலவகையான தானிய ரகங்களும் இல்லை என்றால் இந்த கூடுதல் லாபம் பெற்றிருக்க முடியாது. நாம் இன்றும் ஆதிகாலத்து முறையையே செய்துகொண்டு பழைய நிலையிலேயே இருந்திருப்போம்.

இந்தியாவில் பஞ்சாபிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு வேளாண் துறையில் மற்றவர்களுக்கு முன்னோடியாகவே இருந்து வருகிறோம். அதற்கும் காரணம் பல்கலைக்கழகம் தான். இதுபோக இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். இவர்களின் பங்கும் இந்த உணவு உற்பத்தி, தானிய உற்பத்தி போன்றவைகளில் இருக்க காரணம் பல்கலைக்கழகம் தான்.

அடுத்தகட்ட ஆராய்ச்சிகள்:

தற்பொழுதைய சூழ்நிலையில் விவசாயிகளுடன் விவசாய தொழிலாளர்களும் குறைந்து வருகின்றனர். இதற்கு மாற்றாக இயந்திரங்களை கொண்டு வந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதற்கடுத்தபடியாக உற்பத்திக்கான பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றன. இதற்கும் தீர்வாக நேனோ தொழில்நுட்பமுறை பயன்படுத்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 10 சதவிகித பொருட்களை கொண்டு 100 சதவிகித பலனை பெற முடியும்.

மேலும், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படக் கூடாது, மண்ணின் வளம் குறைந்துவிட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக பயோ எனும் இயற்கை சார்ந்த உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை கூட்டுவதற்கும், தாவரங்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவைகள் மட்டுமல்லாது, வெறும் உணவு உற்பத்தி மட்டும் போதாது என்றும், அதற்கு மேலும் மதிப்பூட்டும் வகையில் மதிப்புக் கூட்டப்பட்ட தரமான சத்துமிக்க உணவு பொருட்கள் உற்பத்தி செய்யவும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெல் ஆராய்ச்சியைப் பொறுத்த வரையில் அதிகமான பருவமழை காரணமாக அதிகமான தண்ணீரால் பாதிப்படைகிறது. அல்லது பருவமழை பொய்த்துப் போவதால் குறைவான தண்ணீரால் பாதிப்படைகிறது. இதற்கு தீர்வாக இந்த இரண்டையும் தண்ணீர் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் அதனை தாங்கி பயிர்கள் வளர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த வகை விதைகள் அறிமுகமாக உள்ளன.

நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு ரகத்தின் தாய் விதைகளும் மத்திய அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டு அவைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஒரு ஆண்டு கால அவகாசம் தேவைப்படும்.

விவசாய பொருளாதாரம்:

விவசாயத்திற்கு பாதகமாக இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் சமீப காலமாக குறைந்து வருகின்றன. இந்த குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்லாமல் குப்பைகளை குப்பை தொட்டியில் போட்டாலே போதும். இதைவிட முக்கியம் விவசாயிகளையும் மற்ற துறையினரைப் போல மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். உழவில்லை என்றால் எதுவும் இல்லை. முடிந்தவரையில் நல்ல விலை கொடுத்து விவசாயப் பொருட்களை வாங்குங்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் லாபம் பெற்றால் விவசாயிகளின் பொருளாதாரம் உயரும். இதனைப் பெறும் 90 சதவிகித விவசாயிகள் தங்களது லாபத்தை மீண்டும் விவசாய உற்பத்தியில் தான் செலவழிக்கிறார்கள். இதனால் இந்திய பொருளாதாரமும் உயரும்.

பொன்விழா அழைப்பு:

பொன்விழா ஆண்டில் நாங்கள்  மாநில அளவில் நடத்தவிருக்கும் விவசாயிகள் தின கொண்டாட்டத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். இதில் விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டும். அந்த சமயத்தில் புது புது கண்டுபிடிப்புகள், புது புது ரக விதைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். அதில் கலந்து கொண்டு பொன்விழா கொண்டாட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப உலகத்தில் எத்தனை தொழில்கள் இருந்தாலும், அதனை எத்தனை பேர் செய்தாலும் உலகம் ‘உழவு’ என்ற அச்சாணி கொண்டே சுழல்கிறது. உழவை மதிப்போம் காப்போம்.