கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர்

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பின் கவனிப்புக்கென அமைக்கப்பட்ட புறநோயாளிகள் பிரிவை உணவுத்துறை அமைச்சர் (06.07.2021) திறந்து வைத்துள்ளார்.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து தங்களது வீடுகளுக்கு சென்ற நோயாளிகள் மீண்டும், சுய பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பின் கவனிப்பு பகுதி என்ற சிகிச்சை மையத்தை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாமினையும் துவக்கிவைத்து தடுப்பூசிகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு செலுத்துவதையும் பார்வையிட்டார். இந்த இரு நிகழ்ச்சியையும் துவக்கி வைத்த அமைச்சர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து முன்னேற்பாடு ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ் சமீரன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டீன் நிர்மலா மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பல்வேறு தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.