பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.06.2021) 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  சமீரன் துவக்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசுகையில், கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில்  கல்விக் தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ – மாணவியர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்விக்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள  அரசு பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என அனைத்துப் பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 872 தொடக்கப்பள்ளிகளில் 27,773 மாணவர்கள், 27,420 மாணவியர்கள் என 55,913 மாணவ – மாணவியர்களுக்கும், 255 நடுநிலைப்பள்ளிகளில் 18,554 மாணவர்கள், 18,376 மாணவியர்கள் என 36,930 மாணவ – மாணவியர்களுக்கும், 105 உயர்நிலைப்பள்ளிகளில் 11,680 மாணவர்கள், 11,643 மாணவியர்கள் என 23,323 மாணவ – மாணவியர்களுக்கும், 154 மேல்நிலைப்பள்ளிகளில் 54,814 மாணவர்கள், 65,358 மாணவியர்களுக்கு என 1,20,172 மாணவ – மாணவியர்களுக்கும், ஆக மொத்தம் 1386 பள்ளிகளை சேர்ந்த 1,12,821 மாணவர்கள், 1,22,797 மாணவியர்கள் என மொத்தம் 2,35,618 மாணவ – மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ராஜவீதி, அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்(கோவை நகரம்) பாண்டியராஜசேகரன்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.