ஆன்லைன் வழி கல்வியை மின்தடை பாதிக்கிறது – எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பண உதவியும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் வினோத் பி செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த  வானதி சீனிவாசன், தமிழக வனத்துறை பிடித்து வைத்திருக்கும் ரிவல்டோ யானையை, நிபுணர்களின் கருத்தை கேட்டு உடனடியாக வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே குடும்பத்தினர் மட்டும் பணியாற்றும் நகை பட்டறைகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் ஆன்-லைன் வழியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவர்களது படிப்பு வெகுவாக பாதிக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில் அணிலுக்கு பெருமை சேர்த்தார் ராமபிரான். ஒரு சிறு உதவியை செய்பவர்களைக் கூட அணிலைப் போல சொல்லும் அளவுக்கு இருந்தது. ஆனால் எப்போதும் தனது இயலாமையை ஒத்துக்கொள்ளாமல் பிறர்மீது பழி போடும் திமுக அரசு இந்த முறை மின்வெட்டுக்கு அணில் மீது பழியைப் போட்டு உள்ளது. தனது தவறை திருத்திக் கொண்டு தடையில்லா மின்சாரத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.