கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவையில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 18.06.2021 ஆய்வு மேற்கொண்டார்.

வடக்கு மண்டலம் பீளமேடு, பயணியர் மில் சாலையில் உள்ள சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப்பணியாளர்களிடம், தூய்மைப்பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும், வீடுகள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என சேகரிக்கப்பட வேண்டும், அனைவரும் முகக்கவசம்  அணிந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.

பின்னர் உடையாம்பாளையம் அப்பநாயக்கன்பாளையம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மத்திய மண்டலம் வ.ஊ.சி. உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், உயிரியல் பூங்காவிலுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் மேனகா, வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி, வ.ஊ.சி.உயிரியல் பூங்கா இயக்குநர் மரு.ஏ.செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர்கள் கருப்புசாமி,  செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.