மனச் சோர்வை மேஜிக் காளான்கள்குணப்படுத்துமா?

மேஜிக் மஸ்ரூம் என்பது அனைவரும் அறிந்த ஒரு போதை பொருள். இது தமிழகத்தில் கொடைக்கானலில் அதிகம் காணப்படும் ஒன்று. இதை பல போதை விரும்பிகள் தேடிச்சென்று பயன்படுத்துவதுண்டு. இவை சைலோசிபின் என்ற வேதிப் பொருள் கொண்டவை. சைலோசிபின் தோற்றமயக்கம் உண்டாக்கும் வகை வேதிப் பொருள். உட்கொண்டபின் அது உடலில் சைலோசின் என்ற வேதிப் பொருளாக மாறி 20-40 நிமிடங்களில் முன்மண்டைப் புறணியின் serotonin ஏற்பிகளை முடுக்கிவிட்டு, உண்டவரின் மனநிலை, அறிதல் நிலை மற்றும் அவதானிப்பு போன்ற மூளையின் நுண்திறமைகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும்.

வழக்கத்துக்கு மாறான புலனுணர்வுகளும் புறக்காட்சிகளும் தோன்றி வேதிப்பொருள் உடலைவிட்டு வெளியேறும்வரை (சுமார் 6 மணி நேரம்) நீடித்துக் கொண்டிருக்கும். ஐக்கிய நாடுகள் 1971 உளநிலை மாற்றிப் பண்டங்கள் கருத்தரங்கு, சைலோசிபின் பட்டியல் 1தடை செய்யப்பட்ட பண்டம் என்கிறது. அதாவது இதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியங்கள் அதிகமுண்டு; எந்த நேரிய மருத்துவப் பயன்பாட்டுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்ததால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சைலோசைபின் தடை செய்யப்பட்டிருந்தாலும் மேஜிக் காளான் பயிரிடலுக்குத் தடையில்லை. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இவ்வகைக் காளான் அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டு மருந்தாகவும் போதைப் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது.

கார்டியன் இதழ்க் கட்டுரை, மன அழுத்த நோயாளிகளின் சிகிச்சையில் மேஜிக் காளான் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறது. மேஜிக் காளான் ஆய்வில் ஈடுபட்டு வரும் அறிவியலாளர்கள், அதன் செயல்திறன் கொண்ட உட்பொருளான சைலோசிபின் மன அழுத்த நோய் சிகிச்சையில் நம்பிக்கையூட்டும் வகையில் பயன்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள்.

மிதமானது முதல் கடுமையானது வரையான பெரும் மன அழுத்தச் சீர்குலைவுகளுக்குச் சைலோசிபின்னுடன் உளவியல்சார் சிகிச்சை முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும்போது, இரண்டு டோஸ் சைலோசிபின் மருந்து, பொதுவான மனச்சோர்வு முறிமருந்தான எஸ்சிடாலொப்ரம் அளவுக்குச் சம ஆற்றல் உடையதாகத் தோன்றுகிறது என்று இரண்டாம் கட்ட மருத்துவ முயற்சியில் எட்டப்பட்ட முடிவுகள் கூறுகின்றன.

இதன் அடிப்படையில் மனச் சோர்வுக்கு நம்பிக்கையூட்டுகிற மாற்று சிகிச்சை நமக்கு கிடைத்துவிட்டது என்கிறார் டாக்டர் ராபின் கார்ஹார்ட்-ஹாரிஸ் (Dr. Robin Carhart-Harris). இவர் இந்த ஆய்வின் இணை-ஆசிரியர் மற்றும் இம்பீரியல் காலேஜ் லண்டன் -இன் தோற்ற மயக்க நோய் (psychedelic) ஆராய்ச்சி மையத்தின் தலைவர். எனினும் அவர் பட்டியல் 1-ல் இருந்து மேஜிக் காளான்களை விடுவித்துச் சுய சிகிச்சையை (D-I-Y ) பரிந்துரைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஏனெனில் தோற்ற மயக்க (hallucinating) நோயாளிகளுக்கு வெறும் மருந்துகள் மட்டும் போதாது. உளவியல் சிகிச்சை மூலம் நோயாளியின் பாதகமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் விடுவிக்க வேண்டியது மிக முக்கியம் என்கிறார்.

சைலோசிபின் எப்படி மூளையைப் பாதிக்கிறது என்பதை முன்பே ஒரு குழு ஆராய்ந்து கண்ட முடிவுகளின் உந்தலாலும், முந்தைய ஒரு சோதனையில் வழக்கமான சிகிச்சைகளால் சற்றும் குணமடையாமல் இருந்த 12 மனச் சோர்வு நோயாளிகளின் உபாதைகள் ப்ஸிலொஸைபின் மருந்தினால் தணிந்தது என்ற காரணத்தாலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீவிர ஆய்வில் 59 மிதமானது முதல் கடுமையானது வரையான மனச் சோர்வு நோயாளிகள் 6 வாரங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நேர்ந்தார்ப்போல் (randomly) நோயாளிகளை 30 மற்றும் 29 பேர் கொண்ட இரு சோதனைக் குழுக்களாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 பேர் குழுவுக்கு தோற்ற மயக்கம் தரக்கூடிய கனமான டோஸ் (2 x 25mg) சைலோசிபின் மருந்தும், 29பேர் குழுவுக்கு வழக்கமான எஸ்சிடாலொப்ரம் மருந்தும் கொடுக்கப்பட்டது. சோதனை முடிவு புதிய இங்கிலாந்து மருத்துவச் சஞ்சிகையில் (New England Journal of Medicine) வெளியிடப்பட்டது.

“நாங்கள் எதிர்பார்த்தபடி ப்ஸிலொஸைபின் (Psilocybin) மருந்து வழக்கமான எஸ்சிடாலொப்ரம்-ஐவிட வேகமாகச் செயல்படுகிறது”என்றார் கார்ஹார்ட்-ஹாரிஸ். கனமான டோஸ் பெற்றவரில் 57% பேருக்கும், எஸ்சிடாலொப்ரம் குழுவின் 28% பேருக்கும் மனச் சோர்வு கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்தது.

மனச்சோர்வைக் குணப்படுத்துதலில் தோற்ற மயக்கச் சிகிச்சை முறைக்கும் இடமுண்டு என்பதற்கான சில மிகச் சக்தி வாய்ந்த சான்றுகளை இந்த ஆய்வுகள் தந்திருப்பதாக அரசர் கல்லூரி லண்டன்-இன் உளநோய் மருந்தியல் பேராசிரியர் ஆன்டனி க்ளியாரே (Anthony Cleare) கூறினார். ஆனாலும் நடைமுறையில் உள்ள மனச்சோர்வுச் சிகிச்சை முறைகளில் உடனே மாற்றம் வரும் வாய்ப்பில்லை என்கிறார். அதற்குப் பெருத்த ஆய்வுகளும் கனத்த தரவுகளும் தேவைப்படும் என்கிறார்.