கொரோனாவிற்கும், புகை பிடித்தலுக்கும் சம்மந்தம் உண்டு

டாக்டர். ராஜேந்திரன், தலைமை மருத்துவர், இருதய நலத்துறை, பி.எஸ்.ஜி மருத்துவமனை

 

புகை பழக்கம்; தற்கொலைக்கு சமம்!

சிறிதாக தெரியும் பல விஷயங்கள் தான் உலகத்தையே புரட்டிப்போட்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கூறும் செய்தி. சிறு வைரஸ் தான் இந்த உலகத்தின் இயல்பு நிலையை இரண்டு ஆண்டுகளாக தவிடுபொடியாக்கி வருகிறது.

சிறிய தோற்றம் உள்ள சிகரெட் தான் ஆண்டிற்கு 12 லட்சம் உயிர்களை இந்தியாவில் காவு வாங்குகிறது என்பது புகைப்பவர்களுக்கு பலருக்கும் தெரிந்திருந்தும், அதை கைவிடுவதில்லை. இதுவரை புகையிலை நுரையீரலை பாதிக்க செய்யும் என்ற தகவலை கேட்டிருப்போம்.ஆனால், புகையிலை பழக்கத்தால் கண்பார்வை பாதிப்படையும், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும், இதயம் பலவீனம் ஆகும் என்பனவற்றை கேட்டிருப்போமா?

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை பலரிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என அனுசரித்து வருகிறது.

புகையிலையினால் பிற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நம் கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு:

 

கொரோனாவிற்கும், புகை பிடித்தலுக்கும் சம்மந்தம் உண்டு

கண்ணுக்கு தெரியாத கொரோனா நம்மை தீடிரென பாதித்துள்ளதால் சுற்றியுள்ள பல விஷயங்களை நாம் மறந்து விட்டோம். இந்த காலகட்டத்தில் அப்படி நாம் கவனிக்க தவறியதில் ஒன்றுதான் புகைபிடிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள்.

கொரோனாவிற்கும், புகை பிடிப்பதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. கொரோனா, புகை இவை இரண்டும் வாய் மற்றும் மூக்கு என உடலினுள் ஒரே வழியில் சென்று தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த இரண்டும் முதலில் பாதிப்பது நுரையீரலைத்தான். கொரோனாவினால் இதய பாதிப்பு, ரத்த அடைப்பு, நுரையீரல் அடைப்பு போன்றவை வருவதைப் போலவே, புகைபிடிப்பதனாலும் இதே பாதிப்புகள் வருகிறது. கொரோனா மற்றும் புகை இந்த இரண்டும் எ.சி.இ எனும் என்சைம் வழியாக தான் நுரையீரலை பாதிக்கிறது.

கொரோனா மற்றும், புகை பிடிப்பதினால் வரும் பாதிப்புகள் இரண்டும், உடலில் எல்லா பாகத்தையும் தாக்குகிறது. ஒருவர் பிடிக்கும் சிகரெட் அவரை மட்டுமல்லாமல் சுற்றி இருப்பவரையும் பாதிக்கிறது.விளம்பரங்களில் இது குறித்த விழிப்புணர்வை கண்டாலும் அதை கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை. புகை பிடிப்பவரின் சட்டையில் இருக்கும் சிகரெட் நிக்கோட்டின் கூட அவரது குடும்பத்தாருக்கு பாதிப்பை உண்டாக்கும்.

1994ம் ஆண்டு கோழிகோடில் உள்ள ஒரு கிராமத்தில், அக்ஷரா கிளப், எனும் குழுவிலுள்ள அகமத் குட்டி என்பவர் புகைபிடித்ததினால் இறந்தார். இதனால் அவர்கள் இனி இந்த கிளப்பில் இருக்கும் நபர்கள் யாரும் புகை பிடிக்கக்கூடாது என முடிவெடுத்தார்கள். தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனால் வரும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை பற்றி கூறி அவர்களையும் திருத்தினார்கள். ஆனால் இதற்கடுத்து வந்த தலைமுறைகள் இந்த முறையை கடைபிடிக்கவில்லை. இருந்த போதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து இந்த குழு செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் காப்பீட்டு திட்டத்தில், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை விட்டால் இன்சென்டிவ் கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு இந்த நடவடிக்கை சாத்தியமாகாது. ஊழியர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் இன்சென்டிவில், புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்தினால் தான் இன்சென்டிவ் வழங்கப்படும் என ஒரு அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் ஓரளவு மாற்றம் நம் நாட்டில் வரும்.

அமெரிக்காவின் புள்ளி விவர கணக்கில், ஒரு வருடத்தில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொரோனாவால் மடிந்துள்ளனர். அதே சமயத்தில், கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட 4 லட்சத்து எண்பதாயிரம் பேர் புகை பிடித்தும், 41 ஆயிரம் பேர் மற்றவர்கள் பிடிக்கும் புகையை எதிர் கொண்டதாலும் இறந்துள்ளனர்.

புகை பிடித்தலினால் பொருளா தார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதை உணர்ந்தாலே இப்பழக்கத்தை விட்டுவிடலாம்.