700 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு!

– டாக்டர். ஜெயமோகன் உன்னிதன்,
நுரையீரல் நிபுணர், நுரையீரல் நல மையம், இந்துஸ்தான் மருத்துவமனை

புகை பழக்கம்; தற்கொலைக்கு சமம்!

சிறிதாக தெரியும் பல விஷயங்கள் தான் உலகத்தையே புரட்டிப்போட்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கூறும் செய்தி. சிறு வைரஸ் தான் இந்த உலகத்தின் இயல்பு நிலையை இரண்டு ஆண்டுகளாக தவிடுபொடியாக்கி வருகிறது.

சிறிய தோற்றம் உள்ள சிகரெட் தான் ஆண்டிற்கு 12 லட்சம் உயிர்களை இந்தியாவில் காவு வாங்குகிறது என்பது புகைப்பவர்களுக்கு பலருக்கும் தெரிந்திருந்தும், அதை கைவிடுவதில்லை. இதுவரை புகையிலை நுரையீரலை பாதிக்க செய்யும் என்ற தகவலை கேட்டிருப்போம்.ஆனால், புகையிலை பழக்கத்தால் கண்பார்வை பாதிப்படையும், சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும், இதயம் பலவீனம் ஆகும் என்பனவற்றை கேட்டிருப்போமா?

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை பலரிடமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ என அனுசரித்து வருகிறது.

புகையிலையினால் பிற உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி நம் கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதன் தொகுப்பு:

700 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு!

சிகரெட் புகைப்பதால் உடல்நலத்திற்கு பல சேதங்கள் ஏற்படும், இதை தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி வருகின்றனர். சிகரெட் புகையில் 7,000 க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. இவை நம் நுரையீரலை மிக விரைவாகத் தாக்கும், பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இரத்தத்தில் இந்த நச்சு இரசாயனங்கள் கலந்துவிடும்.

புகைப்பிடிப்பதால் கார்பன் மோனாக்சைடு எனும் கொடிய வாயு இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை இடம்பெயர்த்து, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பதால் நெடுங்கால சுவாச அடைப்பு நோய் (அல்லது சி.ஓ.பிடி) ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைவது புகைப்பழக்கம் தான். இயல்பாக ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட நேரும் காலத்தை விட, புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 20 மடங்கு அதிகம். புகையிலை பயன்பாட்டால் ஆண்டிற்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு சென்ற ஆண்டு தகவல் ஒன்றை வெளியிட்டது.

புகை பிடிப்பவருக்கு அந்த பழக்கத் தால் உடல் நல குறைவு ஏற்படுவதை தாண்டி அவர் வெளியிடும் புகைக்கு அருகில் இருப்பவர்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒருவர் வெளியிடும் சிகரெட்/பீடி புகையின் தொடர்பில் வரக்கூடிய 25% அல்லது 30% மக்களுக்கு இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இரண்டாம் கட்ட சிகரெட் புகை பாதிப்பால் ஆண்டிற்கு எட்டாயிரம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. இதைவிட கொடுமை என்னவென்றால் உலகம் முழுவதும் ஆண்டிற்கு 700 மில்லியன் குழந்தைகள் இப்படி பட்ட இரண்டாம் கட்ட சிகரெட் புகையை எதிர்கொள்கிறார்கள், அதில் பாதி குழந்தைகள் மரணத்தை சந்திக்கவேண்டியுள்ளது. இத்துடன் குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும் வாய்ப்பும் இதனால் அதிகம் உள்ளது.

இப்படி பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தை கைவிட்ட 8 மணி நேரத்தில் உடலில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு பாதியாக குறையும். 48 மணி நேரத்தில் உடம்பில் உள்ள கார்பன் டை ஆக்சைடு பெரிதளவு குறையும், 72 மணி நேரத்தில் சுவாசிப்பது எளிமையாகும், 3 முதல் 9 மாதங்களில் நுரையீரலின் செயல்பாடு 10% அதிகரிக்கும். 1 ஆண்டில், ஏற்கனவே இருந்த மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும், 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறையும், 15 ஆண்டுகளில் ஒரு சாதாரண நபருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு தான் சிகரெட்டை கைவிட்டவருக்கும் இருக்கும்.

இதுவரை புகையிலை பழக்கம் இல்லை யென்றால் இனிமேலும் விலகியே இருங்கள். புகை பிடிப்பவராக இருந்தால் இன்றே கைவிடுங்கள். தாமதத்தை தவிருங்கள்.