இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலியாக உள்ள 62 ஆக்சிஜன் படுக்கைகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 62 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி வைரஸ் தொற்று பாதிப்பில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 4734 ஆக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 3937 ஆக குறைந்தது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நூற்பாலை, பள்ளிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசு கலைக் கல்லூரியில் 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆக்சிஜன் படுக்கைகளுக்கு நிலவிவந்த தட்டுப்பாடு குறைந்திருக்கிறது.

இதுகுறித்து இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் கூறுகையில்:

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 747 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ள நிலையில் 679 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும், 62 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 40 படுக்கைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் உள்ளது எனவும் மருத்துவமனையில் மொத்தமுள்ள 980 படுக்கைகள் 778 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில் 102 படுக்கைகள் காலியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ஆம்புலன்சில் நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் காத்திருக்கும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.