முழு ஊரடங்கை அலட்சியப்படுத்தும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு உரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில்  மக்கள் சாலைகளில் சுற்றித்  திரிந்த வண்ணமே உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வார காலமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்தது. ஆனாலும் தொற்றின் பாதிப்பு குறையவில்லை என்பதால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

கோவையில்  மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சாலைகளில் மக்கள்  நடமாட்டம் அதிகரித்தே  காணப்படுகிறது. காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலைகளில் மக்கள் வாகனங்களில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

ஆங்காங்கே போலீசார் தடுப்புகள் அமைத்தும் எந்த ஒரு  பயனும் இல்லாமல் உள்ளது. போலீசார் கண்காணிப்பை அதிகரிக்காவிட்டால், முழு ஊரடங்கு அமல்படுத்தியும் பயனில்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது