ஊரடங்கு தளர்வினால் திறக்கப்பட்ட கடைகள்..!         

ஊரடங்கில் இன்றும் நாளையும் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனாலும், தொற்று பாதிப்பு குறையவில்லை. இந்த நிலையில்  24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பொதுமகக்ள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும் வண்ணம் இன்றும் நாளையும் வணிக வளாகங்களை தவிர அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதியில் ஒரு சில கடைகள் மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் ஊரடங்கில் தளர்வு என்றவுடன் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த ஒரு வாரம் ஊரடங்கு என்பது வீணாகும் அபாயம் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.