கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் ஆய்வு

கோவை: கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் மக்களை அனுமதிக்க கொடிசியா வளாகத்தில் புதிய சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கோவைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.  பந்தயசாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தொழில் துறையினருடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர்.

இதன் பின்னர் கொடிசியா அரங்கத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே இரண்டு ஹால்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 1280 படுக்கைகளுடன் செயல்படும் இந்த மையத்தில் தற்போது 579 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

இந்த நிலையில், அங்கு கூடுதல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவத்திற்கு 253 படுக்கைகள், சித்த மருத்துவத்திற்கு 225 படுக்கைகள் என மொத்தம் 478 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சுகாதாரத்துறையினரிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மையத்தில் உள்ள ஆக்சிஜன் செரிவூட்டிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் முடிவு தெரிய மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. சில மணி நேரங்களிலேயே முடிவுகளை தெரிந்து கொள்ளும் விதமாக பரிசோதனை ஆய்வு கூடங்களை அதிகரிக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைத்து சிகிச்சை பெறுபவர்கள் உடல் நிலை குறித்து அறிவிக்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தார்.

இதேபோன்று முதுநிலை மருத்துவ மாணவிகள் உதவித்தொகையை அதிகரித்து வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தொழில் துறையினரும் தங்களது கோரிக்கை மனுக்களை ஸ்டாலினிடம் வழங்கினர்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஈரோடு முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, சுப்ரமணியன், ராமச்சந்திரன், கோவை எம்.பி., பி.ஆர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.