எஜமானருக்கு மட்டும் குழந்தையாகும் ராஜபாளையம் நாட்டு நாய்

ராஜபாளையம் என்றாலே அந்த ஊர் நாட்டு நாய் தான் நினைவுக்கு வரும். காரணம் இதன் உயரம் அந்த அளவிற்கு இருக்கும். இது பார்க்க பயமூட்டும் தோற்றத்தில் இருந்தாலும் அதன் எஜமானருக்கு குழந்தையாகவும் எதிரிகளுக்கு எமனாகவும் மாறும் குணம் கொண்டவைகளாக உள்ளது.  இதனை சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. காலபோக்கில் இது வீட்டு காவலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகள்  பழகிவிட்டால் குழந்தை போல் சுற்றி சுற்றி சுற்றி வரும், தனக்கு உணவு வைக்கும் தட்டில் எஜமானர் சாப்பாடு போட்டால் தான் சாப்பிடும், அதனால் திருடர்கள் வந்து பிஸ்கட்  ஏதும் போட்டால் சாப்பிடாது.

இதன் சத்தம் எதிரியை குலை நடுங்க வைக்கும் அளவிற்கு இருக்கும். அதேபோல், தன் எஜமானருக்காக உயிரை விடும் விசுவசமான நாய்களில் இது எப்பொழுதும் முதலிடம். இந்த நாய்க்கு தனியாக எந்த சிறப்பு உணவும் தேவையில்லை, நாம் சாப்பிடும் உணவுகளை அதற்கு சிறிது வைத்தாலே மகிழ்ச்சியுடன் சாப்பிடும்.

சைவம் மட்டும் கொடுத்து வளர்த்தால் நாயின் ஆக்ரோஷம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அசைவம் கொடுத்து வளர்த்தால், நாய் ஆக்ரோஷத்துடன் இருக்கும். இராஜபாளையம் நாய் மிகுந்த தைரியசாலி, மோப்பம் பிடிக்கும் திறனும் அதிகம் இருக்கும். பராமரிப்பு செலவும் மிகக்குறைவு.

என்ன தான் ஆண் இராஜபாளையம் நாய் ஆக்ரோஷமாக தனது எஜமானை காப்பாற்றினாலும், பெண் நாய் தான் எஜமானர் வீட்டை பாதுகாப்பது முதல் காவல் காப்பதை சிறப்பாக செய்வதாக இராஜபாளையம் நாய் வளர்ப்பவர்கள் பெருமையாக சொல்கிறார்கள்.

ஜீலை, அக்டோபர், நவம்பர் இனவிருத்தி காலத்தில் இராஜபாளைய பெண் நாய்கள் இரண்டு முதல் பத்து குட்டிகள் வரை போடும். இதில் 4 கால்களில் இருபது விரல்கள் உள்ள நாய் சிறப்பாக செயல்படும் என்பதால் இதனை வாங்கவே போட்டி நிலவும். தற்போது இராஜபாளையத்தில் நிறைய நாட்டு நாய் உற்பத்தி பண்ணைகளில் இராஜபாளையம் நாய்கள் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி இராஜபாளைய நாய்களுக்கு அதிகமாக இருந்தாலும், தடுப்பூசிகள் உரிய காலத்தில் போடப்படுகிறது. இராஜபாளைய நாய்களுக்கு வீட்டில் சுற்றித் திரிய விசாலமான இடம் இருந்தால் தானாகவே தனது ஒட்டத்தின் மூலம் உடற்பயிற்சியை செய்து கொள்ளும். அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களுக்கு குறைந்த இடம் இருப்பதால், இராஜபாளைய நாயை கொண்டு வந்து வளர்ப்பதில் சிரமம் ஏற்படும்.

இராஜபாளைய பெண் நாய்க்கு உரிய பருவ வயதில் தனது துணையுடன் சேர விட்டால் கர்ப்பம் தரித்து குட்டிகள் போடும், இதனால் குட்டிகள் விற்பனை மூலம் மிகுந்த லாபம் கிடைக்கும் என்கின்றனர் நாய் வளர்ப்பவர்கள்.

இராஜபாளையம் நாய் ஒரு தடவை தனது மனதில் மனிதரின் முகத்தினை பார்த்து உள்வாங்கிக் கொண்டால், எத்தனை வருடங்கள் கழித்து அவர் வந்தாலும் அவரை தனது நினைவில் வைத்து இருக்கும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.