நம்பியூரில் திருக்குறள் கல்வெட்டு பூங்கா  

நம்பியூரை அடுத்த மலையப்பபாளையத்தில் திருக்குறள் கல்வெட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறள் மலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குறள் மலை சங்கத்தினர் இன்று (27.3.2021) செய்தியாளர்களை சந்தித்தனர்.

சங்கத்தின் தலைவர் ரவிக்குமார், இ.பி.ஜி அறக்கட்டளை தலைவர் பாலகுருசாமி ஆகியோர் கூறியதாவது:

உலக பொதுமறையாக உள்ள திருக்குறளை பாறையில் கல்வெட்டாக வெட்ட பல இடங்களில் ஆய்வு  செய்ததாகவும், இறுதியில் ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே மலையப்பபாளையத்தில் உள்ள 20 ஏக்கர் பரப்பளவிலான ஒரே பாறை மலையில் கல்வெட்டுக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அங்கு 1330 திருக்குறளையும் உரிய விளக்கங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டுக்களாக வெட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.  இந்த பூங்கா அமைந்தால் அது உலக பிரசித்திபெற்ற தலமாக இருக்கும்.

இந்த பூங்கா அமைக்க தோராயமாக 36 மாதங்கள் மற்றும் ரூ.100 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஒரு திருக்குறள் பதிக்கப்பட்டுள்ளது. என்று கூறினர்.