ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வருக்கு “விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியர் விருது”

கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜேனட்க்கு நாட்டின் சிறந்த ஆசிரியருக்கான “விஸ்வேஸ்வரய்யா நல்லாசிரியர் விருது” மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அமைப்பினால் முதல்முறையாக இந்த ஆண்டில் (2020) இருந்து வழங்கப்படுகிறது. முற்றிலும் இணைய வழியாக நடைபெற்ற விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கல்லூரி முதல்வர் ஜேனட்க்கு இவ்விருது வழங்கினார். இவ்விருது 25,000 ரூபாய் ரொக்க பரிசு சான்றிதழ் மற்றும் இலட்சினையை உள்ளடக்கியது. இவ்விருது வழங்கும் விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் பேராசிரியர் அனில் டி சஹஸ்ரபுதே, துணைத் தலைவர் பேராசிரியர் ராஜிவ்குமார் மற்றும் பேராசிரியர் வெங்கட் போன்றோர் கலந்து கொண்டனர்.

இவ்விருது சிறந்த தலைமைப் பண்பு, சமுதாய முன்னேற்றம், ஆராய்ச்சி புதுமைகளை உட்புகுத்துதல் போன்ற திறன்களால் நாட்டின் உயர்கல்வித் துறைக்கு இவர் ஆற்றிய செம்மையான சேவைகளை அங்கீகரிக்கும் வண்ணம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் 25 வருடங்களுக்கும் மேலாக கணிப்பொறித் துறையில் மிகச்சிறந்த பங்காற்றி சுமார் 7 கோடி ரூபாய் அளவில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஆராய்ச்சி நிதிகளை பெற்றுள்ளார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகள் அகில உலக அளவில் மிகச்சிறந்த ஆராய்ச்சி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. இவர் தனது பல கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

இவரின் பங்களிப்பினால் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி NIRF   தரவரிசையில் (2020) தேசிய அளவில் 83-ஆம் இடத்தையும் ஆரியா விருதுகளில் தேசிய அளவில் 2-ம் இடத்தையும், பசுமை வளாக தரவரிசையில் தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தூய்மையான வளாக பராமரிப்பில் தேசிய அளவில் 2-ம் இடத்தையும் (2019) விருது தரவரிசையில் தேசிய அளவில் 3-ம் இடத்தையும், ‘ஓர் மாணவருக்கு ஓர் மரம் -2019’ நிகழ்வில் தேசிய அளவில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது இவரது திறன்களுக்கு ஓர் அடையாளமாக  விளங்குகிறது.

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இவரது சிறந்த ஆளுமையின் கீழ் 366 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்கு முறை தொடர்ச்சியாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்வு ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாணவர்களுக்கு மிக அதிக அளவில் வளாக வேலை வாய்ப்பு மதிப்புயர்வு மையங்கள் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல் போன்ற தளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சிறந்து விளங்கும் வண்ணம்  முதல்வர் ஜேனட் பணியாற்றி பல சாதனைகள் புரிந்து உள்ளார்.

நல்லாசிரியர் விருது பெற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ஜேனட் அவர்களை ஸ்ரீ கிருஷ்ணா  கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி பாராட்டினார். கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.