வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும்

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

மறைந்த முன்னாள் குடியரசுதலைவர்  பிரணாப் முகர்ஜி உருவபடத்திற்கு கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில  தலைவர்  எல்.முருகன், துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், அண்ணாமலை,  பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரணாப் முகர்ஜி நம்முடன் இல்லை என்பது வேதனைக்குரியது அவரது அரசியல் சிந்தனை, பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்ததாக கூறினார்.

தமிழகத்தில் இளைஞர்கள் தொடர்ந்து பாஜக வை நோக்கி வருவதாகவும் மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருவதாகவும் கூறினார், வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை கூட்டணி பலமாக இருப்பதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும் தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.

சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பது தொடர்பாக வழக்குகள் போட வேண்டும் என்றால், அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு போட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தார். டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கொங்கு மண்டலத்தில் பா.ஜ.கவிற்கு  வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். என்றும் தெரிவித்தார். மேலும், ரஜினி தேசியவாதி, ஆன்மீகவாதி அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.