இசை மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பிறந்த தினம்

அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற பட்டம் பெற்றவரும், இணையற்ற நாதஸ்வர வித்வானாகத் திகழ்ந்தவருமான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் என்ற ஊரில் பிறந்தார்.

இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவரின் இசையை ரசிகர்கள் மெய்மறந்து கேட்டனர். முதல் கச்சேரியே அபாரமான வெற்றி அடைந்தது. அதன் பின் பல இடங்களில் கச்சேரிகள் நடைபெற்றன.

‘நாதஸ்வர சக்ரவர்த்தி” என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். ‘சங்கீத அகாடமி விருது”, ‘அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி” உள்ளிட்ட ஏராளமான பட்டங்களும், விருதுகளும் பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை தான் ஒலித்தது.

ஏவி.எம்.செட்டியார், பல மணி நேரம் இவர் இசைத்த ‘தோடி” ராகத்தைப் பதிவு செய்து ஆறரை மணி நேர இசைத்தட்டை வெளியிட்டார். இது உலகம் முழுவதும் விற்பனையாகி சாதனை படைத்தது. ஈடு இணையற்ற நாதஸ்வரக் கலைஞர் என்று போற்றப்பட்ட டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1956 ஆம் ஆண்டு மறைந்தார்.