பணத்தால் முதியவருக்கு நேர்ந்த கொடுமை, மீட்டெடுத்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கடந்த 10 நாட்களுக்கு முன் சாலையில் பார்வையற்ற 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஈரநெஞ்சம் அறக்கட்டளை உடனடியாக அவரை மீட்டு, ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வரும், கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் அனுமதித்தது.

யார் அந்த முதியவர், எதனால் அவருக்கு இந்த நிலை வந்தது என்பதை அவரே அவரது கண்ணீர் வடிக்கும் வார்த்தைகளால் கூறியது, என் பெயர் ஜெயபால். எனது ஊர் திருநெல்வேலி. வசதியான வீட்டுப் பெண்ணைத் திருமணம் முடித்ததால், பிறந்த வீட்டில் வாழ்ந்தது போல மனைவியையும் எங்களுக்குப் பிறந்த மகளையும் நல்ல வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல வேலைகள் செய்து வந்தேன்.

ஆனாலும் போதிய பணம் சம்பாதிக்க முடியாமல் போனது. போதிய வருமானம் இல்லாததால் வருமானத்திற்காக மனைவியையும் மகளையும் மனைவியின் அம்மா வீட்டில் விட்டு விட்டு குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் வேலை தேடி அலைந்தேன்.

கூலி வேலை செய்தும், பல நிறுவனங்களில் வேலை செய்தும் கூட தன் மனைவியையும், மகளையும் காப்பாற்ற போதிய அளவு வருமானம் ஈட்ட முடியவில்லை. எனது சம்பாத்தியம் எனக்கே பற்றாக்குறையாக இருந்தது.

இதனால் கையில் பணம் இல்லாமல் வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை. ஆனாலும் சிறிது நாட்கள் கழித்து அவர்களைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது தக்க மரியாதை இல்லாமல் அவமானத்திற்குள்ளானேன். அதனால் பணம் தான் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணம் என்று, அவர்களை விட்டு மீண்டும் பிரிந்து விட்டேன். ஆனாலும் மனைவி, மகளின் நினைப்பிலேயே வாழ்ந்து வருகிறேன்.

பிறகு கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் நிரந்தரமாக வேலை பார்த்து வந்தநிலையில் கடந்த ஒரு வருடமாகக் கண் பார்வை சரிவரத் தெரியாமல் போகவும், வேலை பார்க்காமல் மில்லிலேயே இருந்தேன்.

ஆனால் இந்தக் கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் நான் வேலை பார்த்து வந்த மில் நிரந்தரமாக மூட வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டது. இதனால் என்னை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர்.

கடந்த நான்கு மாதமாக எனக்குக் கண் பார்வை முழுமையாகத் தெரியாமல் போய் விட்டது. சாப்பாட்டிற்கும் வழி இல்லை. கண்ணும் தெரியவில்லை. எங்கு செல்வது என்றும் தெரியவில்லை.

என்னுடன் வேலை பார்த்து வந்த சக நண்பர்கள் உதவியால் சிறிது நாட்கள் மட்டுமே கழிக்க முடிந்தது. இதனால் வேறு வழி தெரியாமல் சாலைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று கண்ணீர் மல்க கூறினார்.

அதனைக் கேட்டுக் கொண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவருக்கு மன தைரியம் கொடுத்து, மீண்டும் ஒருமுறை அவரிடம் ”நீங்கள் உங்கள் மனைவி மகளைப் பார்க்க விருப்பப்படுகிறீர்களா ? அவர்களிடம் உங்களைச் சேர்த்துவிடவா ?” என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் , “அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே உள்ளது ஆனால் , அவர்களைப் பிரிந்து நாற்பது வருடம் ஆகிவிட்டது. இதுவரை எந்தச் சொத்தும் சேர்க்க முடியவில்லை. ஒரு காசும் கையில் இல்லை நடுத்தெருவில் பார்வை இழந்து தவிக்கின்றேன்.

இந்த நிலையில் அவர்களைச் சந்திப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. ஆகையால் வேண்டாம். உங்கள் காப்பகத்திலேயே காலத்தைக் கழித்து விடுகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றார்.

மனம் முழுவதும் தன் குடும்பத்தை எண்ணி வாழும் பெரியவர் ஜெயபாலுக்கு உடனடியாகப் பார்வை திரும்பக் கிடைக்க ஈரநெஞ்சம் அறக்கட்டளை முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாகக் கோவை ஐ பவுண்டேஷனில் அவருக்குக் கடந்த ஒருவாரம் சிகிச்சை மேற்கொண்டு நேற்று ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதில் பெரியவர் ஜெயபாலுக்கு மீண்டும் பார்வை திரும்பியது.

மூன்று மாதங்கள் இருளில் வாழ்ந்தது சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்த முதியவர் இனி தன் வாழ்நாளை காப்பகத்திலேயே கழிப்பது என்று முடிவு செய்ததோடு காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவியாக இருந்து கொள்வேன் என்று மனம் நெகிழ்ந்து தெரிவித்தார்.