எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

2020 – ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை மையமாகக் கொண்டு தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ. 1,00,000/-விருதுத் தொகையும் உள்ளடக்கியது. விருது பெறும் எழுத்தாளுமை பற்றிய ஆவணப்படமும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்படும். விருதாளரின் படைப்புகள் குறித்து இலக்கிய அமர்வுகள் நடத்தப்படும்.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் இயற்பெயர் என்.ஆர்.சுரேஷ் குமார். ராமேஸ்வரத்தில்  1953ஆம் ஆண்டு  அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்தார். இளமைக்காலம் முழுக்க மதுரையில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், அரசியல் அறிவியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார். மாநில அரசு வருவாய்த்துறையில் சிரஸ்தாராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றார்.

1979 முதல் சிறுகதைகள் எழுதி வரும் இவரது முதல் தொகுப்பு ‘அலையும் சிறகுகள்’ 1982-ல் வெளியானது. இதனை தொடர்ந்து மறைந்து திரியும் கிழவன், மாபெரும் சூதாட்டம், அவரவர் வழி, நானும் ஒருவன், நடன மங்கை, நள்ளிரவில் சூரியன், இடப்பக்க மூக்குத்தி, பின் நவீனத்துவவாதியின் மனைவி, நாவல் – கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் ஆகிய நூல்கள் இவர் எழுதியுள்ளார். இவர் தொடர்ச்சியாக நாற்பதாண்டு காலமாக தமிழிலக்கியத்தில் இயங்கி வருகிறார். இதுவரை 10 நூல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தனது இணையதளத்தில் தொடர்ச்சியாக குறுங்கதைகளை எழுதி வருகிறார். இவரது புதிய நாவல் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது மதுரையில் வசித்துவரும் இவரது மனைவி பெயர் மல்லிகா. இவர்களுக்கு அபிநயா, ஸ்ரீஜனனி என்ற இரண்டு மகள்கள் உள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் விஷ்ணுபுரம் விருது இதுவரை ஆ. மாதவன், பூமணி,  தேவதேவன், தெளிவத்தை ஜோசப்,  ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கெளதமன், அபி ஆகிய படைப்பாளுமைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.