ஹார்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் விராட்கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் திருப்புமுனையாக இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 87 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தாலும், ஹர்திக் பாண்ட்யாவின் (83 ரன்) அதிரடியும், டோனியின் (79 ரன்) நேர்த்தியான ஆட்டமும் அணியை சரிவில் இருந்து மீட்டது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.

மழை காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் இந்திய அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 21–ந் தேதி நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:–

‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்த போது மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தேன். ஆனால் தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டை வேகமாக இழந்து விட்டோம். இருப்பினும் டோனியும், கேதர் ஜாதவும் நன்றாக ஆடினார்கள். பின்னர் ஹர்திக் பாண்ட்யா அபாரமாக செயல்பட்டார். டோனி நாங்கள் நினைத்தபடி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தார். இலங்கை தொடரை போல் இந்த போட்டியிலும் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் நன்றாக செயல்பட்டு தங்கள் திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் எல்லோரும் அருமையாக செயல்பட்டனர்.

தன்னம்பிக்கையுடன் ஆடிய ஹர்திக் பாண்ட்யாவின் இன்னிங்ஸ் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் 3 துறைகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) சம திறமையுடன் விளங்குகிறார். அவர் நமக்கு கிடைத்து இருப்பது அதிர்ஷ்டமாகும். யுஸ்வேந்திர சாஹல் எந்த சூழ்நிலையிலும் முடியாது என்று மறுக்காமல் துணிச்சலாக பந்து வீசினார். புவனேஷ்வர்குமார், பும்ராவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். மழைக்கு பின்னர் ஆட்டத்தை பார்க்கையில் நமது அணியின் சிறந்த 20 ஓவர் போட்டி பந்து வீச்சு போல் இது இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், ‘இது எனக்கு ஒரு நல்ல நாளாகும். சில கேட்ச்கள் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. நிறைய பேர் நான் மாறி விட்டதாக நினைக்கிறார்கள். நான் பழைய ஹர்திக் தான். என்னிடம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.