அதிமுக-வுக்கு போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம் – திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு சூலூர் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ‘தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறார். திமுக அரசு என்றுமே பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மணிப்பூரில் பெண்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. இதனையெல்லாம் பா.ஜ.க. அரசு சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.

அம்பானி வீட்டு திருமணத்திற்காக 10 நாளில் சர்வதேச விமான நிலையம் அங்கீகாரம் கொடுத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் கோவையைச் சர்வதேச விமான நிலையமாகச் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். அ.தி.மு.க.-வினர் பிரதம வேட்பாளர் யார்? என்று தெரியாமலேயே போட்டியிடுகின்றனர். பா.ஜ.க.வை சமாதானப்படுத்தத் தேர்தலில் நிற்கின்றனர். பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாது. அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பா.ஜ.க-வுக்குப் பயந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாஜக-வின் பினாமி கட்சிதான் அதிமுக. அந்த கட்சிக்குப் போடுகின்ற ஓட்டு நோட்டாவுக்கு சமம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியக் கூட்டணிதான் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.