கே.பி.ஆர். கலை கல்லூரியில் உலக நுகர்வோர் தின கருத்தரங்கம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் குழுவின் சார்பாக உலக நுகர்வோர் தினக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்குக் கல்லூரிச் செயலர் காயத்ரி ஆனந்த் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கீதா  தலைமையேற்று, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நுகர்வோர் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்வில் குடிமக்கள் நுகர்வோர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறையின் தொழில்முறைக் கணக்கியல் பிரிவு உதவிப்பேராசிரியர் வசந்தி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாகக் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பதினாறு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலாளர் பிரதீப்குமார் உரையாற்றுகையில், நுகர்வோர் வாழ்வியல் மேம்பாட்டிற்கான சட்டவிதிமுறைகள் பலவற்றை எடுத்துக் கூறித் தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சூலூர் வட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் செல்வ பாண்டியன் உணவு கலப்படத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். பவர் இன்ஜினியர்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு அமைப்பின்  தலைவர் குழந்தைவேலு மின் சிக்கனம் குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில அளவிலான பொதுச்செயலாளர் பால கிருஷ்ணன் வேளாண் தொழில்துறையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துச் சூழலியல் சார்ந்த கருத்துக்களைப் பதிவுசெய்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்களான மேட்டுப்பாளையம் மகளிர் நுகர்வோர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் மஹாபுனிசா, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொருளாளர் விஜய்குமார், தன்னார்வ நுகர்வோர் உரிமைகள் அமைப்பின் பொருளாளர் சுரேஷ், கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் செயல் தலைவர் அய்யாசாமி, நுகர்வோர் குடிமக்கள் மையத்தலைவர் வெங்கடேசன், தொண்டாமுத்தூர் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் கல்வி நல மையச் செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டு நுகர்வோர் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பல கருத்தாக்கங்களை உரையாக வழங்கினர்.

இதில் 285 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.