அன்வேஷனா-அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி

அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து “அன்வேஷனா-அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி தமிழ்நாடு-2024” எம்.சி.இ.டி. செட் வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மையத்தில் நடைபெற்றது.

“அன்வேஷனா” என்பது பொறியியல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து கண்டுபிடிப்புகளை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் மாணவர்கள் வழிகாட்டிகளாகவும், பள்ளி மாணவர்கள் கற்றுகொள்பவர்களாகவும் பங்காற்றிவருகின்றனர். இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் அறிவியலைப் பற்றிய புரிதலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது .

இவ்விழாவில் எம்.சி.இ.டி.யின் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறையின் மாணவன் ஆர்.பிரனேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். எம்.சி.இ.டி.யின் இயந்திரவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர். டி. நாதன், அன்வேஷனாவைப் பற்றிய அறிக்கையை வழங்கினார்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பொள்ளாச்சி கஞ்சம்பட்டி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த தொகுதி மருத்துவ அதிகாரி, டாக்டர்.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் தனது உரையில், அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது சமூகத் தேவைகளை மேம்படுத்துவதற்கு அறிவியல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை மேற்கோள் காட்டினார். புதிய விஷயங்களை உருவாக்கும்போது இயற்கைக்கு எதிராகச் சென்று தீங்கு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார். நல்வாழ்வை மேம்படுத்த மனமும் இதயமும் சீரமைக்கப்பட வேண்டும், என்றார். பின்னர் பங்கேற்பாளர்களின் திட்டங்களின் தரம் குறித்து அவர் பாராட்டினார்.

இக்கண்காட்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் பெங்களூர் அகஸ்தியா சர்வதேச அறகட்டளையைச் சேர்ந்த அன்வேஷனாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினார். சிறந்த செயல்திட்டங்களுக்கு மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தஅரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் வென்றனர். மூன்றாம் பரிசை எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.