முடித்து வைக்கப்படுமா? காத்திருக்கும் வழக்குகள்!

உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை மக்கள் தொகை போல் பெருகி வருகிறது. மேலும், நீதி மன்றங்களில் தோராயமாக சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.

இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 25 உயர் நீதிமன்றங்களில், 1,114 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 840 நீதிபதிகள் நிறந்திர பணி நியமன ஆணை பெற்றவர்கள். 274 பேர் கூடுதல் நீதிபதிகள் ஆவர். மேலும், 330 இடங்கள் இன்னும் நிறப்பபாடாமல் காலியாக உள்ளது. கடந்த ஆண்டு தரவுப்படி 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சுமார் 169,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல், டிசம்பர் 2022 நிலவரப்படி 5 கோடி வழக்குகளில் 4.3 கோடி வழக்குகள், அதாவது 85 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி விவாதப் பொருளானது. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பட்டன.

இப்படியான நிலையில் வழக்கமான 6,549 சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள் என 45,642 இதர வழக்குகள் உட்பட சுமார் 52,191 வழக்குகளை கடந்த டிசம்பர் மாத முடிவில் உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கிறது. இருப்பினும், மலை போன்று குவிந்து கிடக்கும் வழக்குகள் நிலை? கேள்விக்குறி? தன் தரப்பு நியாயத்திற்கு வேண்டி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்து அதன் முடிவுக்காக நடக்கும் மக்களின் குமுறல் செய்திகளை ஆங்காங்கே செவி சாய்த்து கேட்க நேர்கிறது. அதில், சிலர் 20 ஆண்டுகள், 35 ஆண்டுகள் என காலம் கடந்தும் வழக்கில் வெற்றியையும் கண்டு உள்ளனர்.

ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு மக்கள் தொகை அதிகம். அதனாலோ, என்னவோ நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகள் அதிகமாக இருக்கிறது. இருப்பினும், வழக்குகள் ஆமை வேகத்தில் நகராமல் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காலம் தொட்டு எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. 2024 ஆண்டும் அதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.