ரொக்கப்பரிசு இல்லை., பொங்கல் பரிசுத் தொகுப்புஅறிவிப்பு!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், விலையில்லா கரும்பு, சர்க்கரை, வேட்டி சேலை, பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில், பொருட்களுடன் ரூ.2000 ரொக்கமும் வழங்கப்பட்டது. 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.

இதனிடையே கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. இதனால் இந்தாண்டும் ரொக்கம் அறிவிக்கப்படும் என்று ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இதனிடையே, பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் வசிக்கும் 2 கோடியே 19 லட்சம் குடும்பத்தினருக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் வழங்குவது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறாதது பொதுமக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ், “பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணத்தையும் தமிழக அரசு மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல், ரொக்கப் பரிசு தொடர்பான எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.