ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறிய நதி

பெருகி வரும் தொழிற்சாலைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை. அதேபோல், ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டின் தொழில் வளம் சார்ந்து இருக்கிறது என்பதும் உண்மை. அதே நேரத்தில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இயற்கை வளத்தைச் சீர் கெடுக்கின்றது என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இயற்கை தற்போது இல்லை. இன்று இருக்கும் இயற்கை வளம் வரும் காலங்களில் இருக்குமா? என்பதும் சந்தேகமே?

இதற்கு எடுத்துக்காட்டாக, ரஷ்யாவின் முக்கிய நதிகளில் ஒன்றான இஸ்கிடிம்கா நதி தற்போது பீட்ரூட் சிவப்பு நிறத்தில் மாறி இயற்கை ஆர்வலர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இஸ்கிடிம்கா நதி ரத்த சிவப்பு நிறத்தில் மாறுவது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு இதே போல் நிறம் மாறியது. தற்போது மீண்டும் நிறம் மாறியிருக்கிறது. ரஷியாவில் உள்ள பல்வேறு நதிகள் இதுபோன்று மாசுபாடு காரணமாக அவ்வப்போது சிவந்த நிறத்தில் மாறுவது தொடர்கதையாகி விட்டது.

தொழில் நகரமாக இருக்கும் கெமரோவோவில் தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் ஆறுகளில் விடப்படுகிறது. அதனால், ஆறுகளில் நச்சு கழிவுகள் கலந்து, நச்சு நீராக மாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாகவும், இஸ்கிடிம்கா நதி நிறம் மாறி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கான, ஆய்வுகள் நடந்து வருகிறது. நீரின் நிறம் மாற்றம் காரணமாக வாத்துகள் இறங்கவும் மறுக்கின்றன என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இறைவன் நமக்கு அளித்த விலைமதிப்பு மிக்க அன்பளிப்பு இயற்கை, அதைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.