கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியமைக்காக 1592 பேர் மீது வழக்கு

கோவை:  கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியமைக்காக 1592 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு  ரூ.2 லட்சத்து15 ஆயிரத்து 800 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிதுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் சட்டப்பிரிவு 144, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ன் படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவும் மற்றும் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் தமிழக முதல்வர்  வழிகாட்டுதலின்படி புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டு அது தொடர்பான அரசு ஆணை  வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தளர்வுகளுடன் கூடிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி கோவை மாநகர காவல்துறையானது கோவை மாநகரில் கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒரு சிறப்பு செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின்படி கோவை மாநகரம் முழுவதும் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்துவது குறித்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கோவை மாநகரில் 30 இடங்களில் சிறப்பு வாகனத்தணிக்கைக்காக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோக பொதுவெளியில் தேவைமின்றி சுற்றித்திரிபவர்கள், கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 23 நான்கு சக்கர ரோந்து வாகன ரோந்துகளும், 44 இருசக்கர ரோந்து வாகனங்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபோக, கோவை மாநகரில் ஏற்கனவே உள்ள 11 எல்லைப்புற சோதனைச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை மாநகர காவல்துறையினரில் சுமார் 700 அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கொரோனா பரவல் தடுப்பு திட்ட அலுவலில் ஈடுபடுவார்கள்.

கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா பரவுவதல் தடுக்கும்பொருட்டு முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் மற்றும் கொரோனா வழிகாட்டுதலை மீறுபவர்களின் மீதும் 5ஆம் தேதி  613 வழக்குகளும் மற்றும் 6ஆம் தேதி 980 வழக்குகளும் என இருதினங்களில் மட்டும் கொரோனா விதிமுறைகளை மீறியமைக்காக 1592 வழக்குகள் விதிக்கப்பட்டு, ரூ 2 லட்சத்து 15 ஆயிரத்து 800 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதுபோக விழிப்புணர்வு தொடர்பாக முகக்கவசமின்றி பொதுவெளியில் சுற்றித் திரிந்த 2045 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.