கே.எம்.சி.ஹெச் – ல் கால்களில் ரத்தக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை முறை!

இதயத்திலிருந்து கால்களுக்கு ரத்தம் செல்லும் ரத்த குழாயில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமானது. காரணம் ஒருவர் நடக்கும்போது பலவிதமாக இந்த ரத்த குழாய்கள் வளைந்து நெளிந்து திரும்புகிறது.

இந்த “பெமோரல்” ரத்தநாளத்தில் கொழுப்பு படிவதால் அடைப்பு ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் இந்த அடைப்பை நீக்க பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சைகளை கண்டறிய தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் பைபாஸ் சிகிச்சை முறையில் அடைபட்டுள்ள ரத்த நாளத்தை கண்டறிந்து, அந்த பகுதியை அகற்றி, சிகிச்சை செய்தனர். ரத்த குழாயில் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, பலூன் அஞ்சியோபிளாஸ்டி முறையை பயன்படுத்தி அடைப்பை சரி செய்யப்பட்டது. பின்னர், ஸ்டென்ட் எனப்படும் உலோகத்தால் ஆன வலையை பயன்படுத்தி அடைப்பை நீக்கினர். இந்த ஸ்டென்ட் எனும்  உலோக வலை பின்னலில் ஓராண்டுக்குள் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் இதற்கு மாற்று முறையை கண்டறிய அர்ப்பணித்துக் கொண்ட ‘பாஸ்டன் சயின்டிபிக் கார்ப்பரேஷன்’ ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை அறுவை சிகிச்சை இல்லாமல் நீக்க இந்தியாவில் புதிய வகை ‘பாக்லிடாக்செல் ஸ்டென்ட்’ ஒன்றை, மருந்துடன் இணைத்து உருவாக்கியது. உலகில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்டென்ட், ஓராண்டுக்கு பின்னரும் 90% நிலைப்புத்தன்மையை அளித்தது. இது ரத்த நாள அடைப்பு அறுவை சிகிச்சைக்கு மாற்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘எலுவியா’ என்ற இப்புதிய ஸ்டென்ட், இந்தியாவில் 2021 ஜூலை 1ல் அறிமுகமாகியுள்ளது. தென்னிந்திய அளவில் முதன் முறையாக கே.எம்.சி.ஹெச்  மருத்துவமனை  இப்புதிய ஸ்டென்டை பயன்படுத்தி சிகிச்சை  மேற்கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கிடைக்கும்  உலகத்தரம் வாய்ந்த நவீன சிகிச்சை முறை, தற்போது இந்த மண்டலத்தில் உள்ள மக்களும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஸ்டென்ட் பொருத்த, இந்தியாவில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையும் ஒன்றாகும். இன்னும் சில மாதங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கிடைக்கச் செய்ய தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் கதிரியக்க துறையின் நுண்துளை சிகிச்சை  சிறப்பு  மருத்துவர்கள் மாத்யு செரியன், பங்கஜ் மேத்தா, சந்தோஷ் ஆகியோர் கூறியதாவது, ” இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சிகிச்சை முறை. கால்களுக்கு மிக முக்கியமாக ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் சிக்கலான நிலையை இதன் மூலம் தவிர்க்க முடிகிறது. சில நோயாளிகள், கால்களில் ஆறாத  புண்களுடன் வருவதால் அவற்றை சில சமயங்களில் குணப்படுத்த முடிவதில்லை. இது போன்ற நிலையில், அவர்கள் கால்களை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளித்திருந்த போதும், எவ்வளவு நாட்களில் அடைப்பு சரியாகும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால், இப்போது அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு எவ்வித பிரச்சனையும் வர வாய்ப்புகள் இல்லை என உறுதியாக சொல்ல முடியும்,” என்றனர்.

இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி அவர்கள் கூறுகையில்: இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் எந்தவொரு நவீன சிகிச்சை முறை வந்தாலும் கே.எம் .சி.ஹெச் மருத்துவமனை நமது பகுதி மக்கள் பயன்படும் வகையில் நவீன சிகிச்சை முறை  செய்யப்பட்டு வருகிறது. இதற்கு கே.எம்.சி.ஹெச்-ன் தலை சிறந்த மருத்துவர்கள் மற்றும்  அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள், தரமான உட்கட்டமைப்புடன் செயலாற்றி வருவதால் எங்களால் மிக சவாலான தருணங்களிலும் தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கிட முடிகிறது” என்றார்.