“10 ஆண்டுகளில் யானைகளைப் பார்க்க முடியாது” – உயர் நீதிமன்றம் வேதனை! 

யானைகளை பாதுகாக்க தீவிரம் காட்டாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளைப் பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
 வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், டாஸ்மாக் மது பாட்டில்கள் டெண்டர் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது சமீபத்தில் மின்வேலியில் சிக்கி நான்கு யானைகள் மரணமடைந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யானைகளை பாதுகாக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றனர்.
விவசாயத்தை அளிப்பதாக விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டாலும் யானைகளைப் பாதுகாக்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும். விவசாய நிலங்களுக்கு மின்வேலி அமைப்பதற்குப் பதில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மின்வேலி அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்கிறேன் என்றார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.