சச்சினுக்குப் பிறகு தோனிதான்!

இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல. எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும். அது, உலகக்கோப்பையோ, ஐபிஎல் போட்டியோ, போட்டியின் மீது தான் எப்போதும் ஒரு கண் இருக்கும்.

வரலாற்றுச் சாதனைகளை படைக்கும் கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கும். தங்களது பிடித்தமான வீரர்களின் ஹேர் ஸ்டைல் முதல் அவர்களின் ஜெயர்சி எண் வரை அனைத்தையும் அடையாளம் கண்டுகொள்ளும் ரசிகர்கள் இங்கு அதிகம்.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் அணியும், 7ம் எண் ஜெர்சியை விரும்பி வாங்குபவர்களும் இன்றும் ஏராளம்.

இப்படி இருக்கையில், இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆற்றிய சேவையை கவுரவிக்கும் வகையில், அவர் அணிந்திருந்த 7ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ. அறிவிப்பின் பொருள் என்ன? ஜெர்சி எண்கள் ஏன் ஓய்வு பெற வேண்டும்? அதை யார் ஒதுக்குவார்கள்? பல கேள்விகள் நமக்குள் தோன்றும் அவற்றுக்கான பதிலை காணலாம்..

பி.சி.சி.ஐ. அறிவிப்பின் பொருள் என்ன?

ஒரு ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளிப்பது என்பது, அந்த ஜெர்சி எண்ணை மற்றொரு வீரரால் தேர்ந்தெடுக்க முடியாது. அதாவது பிசிசிஐயின் முடிவால் இந்திய அணியில் எந்த வீரரும் தோனி அணிந்த 7ம் எண் ஜெர்சியை இனி அணிய முடியாது.

இதற்கு முன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10ம் நம்பர் ஜெர்சிக்கு கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்திருந்தது. தற்போது தோனியின் சேவையை மதித்து இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

ஜெர்சி எண்கள் ஏன் ஓய்வு பெற வேண்டும்?

தனித்தன்மையுடன் விளையாடியில் , சிறந்து விளக்கும் வீரர்களுக்கு அவர்களின் ஜெர்சி எண்ணுக்கு ஓய்வு அளித்து சிறப்பு செய்யப்படுகிறது. வீரர்களுக்கு அவர்கள் அணிந்திருந்த ஜெர்சி எண்களை ஓய்வு கொடுத்து கவுரவிப்பது விளையாட்டு உலகில் வழக்கமாகி வருகிறது.

அவ்வாறு ஓய்வு பெற்ற ஜெர்சி எண்கள் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படாது. அந்த எண் கொண்ட ஜெர்சிதான் அந்த வீரர்களின் ‘ஐகானிக் ஜெர்சி’யாக நினைவில் நிற்கும்.

சச்சின், தோனிக்கு மட்டுமே உள்ள சிறப்பு

பிசிசிஐ-யின் வரலாற்றில், இதுவரை இரண்டு ஜெர்சிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த 10ம் எண் ஜெர்சி, மற்றொன்று தோனி அணிந்திருந்த 7ம் எண் ஜெர்சி.
அந்த வகையில் சச்சினுக்குப் பிறகு தோனிதான் அந்த சிறப்பைப் பெற்றுள்ளார்.

வீரர்கள் ஜெர்சி எண்ணை தேர்வு செய்வது எப்படி?

வீரர்கள் தங்களுக்கு விருப்பமான ஜெர்சி எண்ணை தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் அந்த எண்களை தேர்வு செய்வதில் பலர் நியூமராலஜியை பின்பற்றுவதாக விளையாட்டு ஆய்வாளர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

“வீரர்கள் பெரும்பாலும் ஒன்பதுகளுடன் வரும் எண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜெர்சி எண்களைத் தேர்ந்தெடுப்பதில் வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் கேட்கிறார்கள்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணிந்திருக்கும் ஜெர்சி எண் 45. விராட் கோலி அணிந்திருக்கும் ஜெர்சி எண் 18. இந்த ஜெர்சி எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் நமக்கு 9 கிடைக்கும். மேலும் தோனி தனது ஜெர்சி எண் 7ஐ தேர்வு செய்ததன் பின்னணியில் ஒரு தீம் உள்ளது.

தோனி ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். இதனை அங்கீகரிப்பதற்காகவே அந்த ஜெர்சி எண்ணை அவர் தேர்வு செய்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.