பெண்கல்வியின் முன்னோடி தமிழகம் – தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைத்‌ தலைவர்‌ அப்பாவு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  இந்துஸ்தான்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்  சட்டமன்ற நாயகர்‌ – கலைஞர்‌ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம் தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவைத்‌ தலைவர்‌ அப்பாவு தலைமையில் நிகழ்ந்தது. அவர் பேசுகையில், கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழக வளர்ச்சிக்கு கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு பெரிதளவில் உதவும் வகையில் இருந்தது. இந்தியாவில் பெண் கல்வி வளர்ச்சியில் தமிழகம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதற்குக் காமராஜர், எம்.ஜி.ஆர்., மற்றும் கலைஞர் போன்ற  முக்கிய  தலைவர்கள் பெரும்  பங்காற்றி உள்ளனர்.

மேலும், இக்கருத்தரங்கில், இந்துஸ்தான் கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

கருத்தரங்கில்,  பேச்சுத் திறமையில் சிறந்த  5 கல்லூரி  மாணவர்கள் கலைஞரின் சாதனைகளைக் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அவர்களுக்கு ஆதரவு பரிசாக ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்‌ மற்றும்‌ முன்னாள்‌ நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, சட்டமன்ற பேரவை அலுவலர்கள், மாவட்ட வருவாய்த்துறை ஆட்சியர், கல்லூரி மாணவர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.