பொருளாதார மந்தநிலை; வேலை பறிபோகும் அபாயம்

அமெரிக்கா போன்ற உலகின் வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட கடன் உச்சவரம்பு நெருக்கடி சர்வதேச நிதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலகமே கண்டு வியக்கும் பெரும் பணக்கார நாடு, பொருளாதார வல்லரசு நாடு என்பன போன்ற பெருமைகளைக் கொண்ட அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் அரசு செலவிடப் பணம் இல்லாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கிறது போன்ற செய்திகள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியது. முன்னதாக, இலங்கை அரசாங்கம் நிதி நெருக்கடியில் சிக்கியது, அதனால் மக்கள் கிளர்ச்சி வெடித்தது, அதனை சமாளிக்க உலக வங்கி, இந்தியா போன்ற நட்பு நாடுகளிடம் கடன் பெற்றது, அதனை தொடர்ந்து பாக்கிஸ்தான் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது போன்ற பொருளாதார பிரச்னைகளை சந்தித்த நாடுகளின் நிலைமைகளைக் கண்ணுற்ற பார்த்தோம்.

இதற்கிடையில், உலக அளவில் பொருளாதாரம் ஒரு சரிவை சந்திக்கும் என பல்வேறு நிதி ஆதார அமைப்புகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தன. உலக அளவிலான சில முக்கியமான வங்கிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து மட்டுமல்லாமல் சிலிகான் வேலி வங்கி, சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயஸ் வங்கி போன்ற உலகின் புகழ்மிக்க வங்கிகள் திவாலானது. அதோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 4.6 டிரில்லியன் டாலர் அளவிற்கு சந்தை மதிப்பு இழப்பை சந்தித்துள்ளன.

மூலதனங்களின் விலை உயர்வு

இதுமட்டுமல்லாமல், மெட்டா, எக்ஸ் தளம் (ட்விட்டர்), கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் நிதி நிலமையை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்த வரிசையில், இந்தியாவில் ஆடியோஸ்ட்ரீமிங் சந்தையில் சுமார் 26 சதவீத பங்கை கொண்டுள்ள ஸ்பாட்டிஃபை ஆட்குறைப்பை நடவடிக்கையில் இறங்கியது மட்டுமல்லாமல் 17 சதவீத ஊழியர்கள் உடனடியாக வேலையை விட்டுச் செல்லுங்கள் என்று தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஏக் கேட்டுக் கொண்டுள்ளார். உலக பொருளாதாரம் வியத்தகு அளவில் குறைந்துள்ளது மற்றும் மூலதனங்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.

இது ஒரு புறம் இருக்க இந்தியாவின் முன்னணி நிறுவனமான எட்டெக் பைஜூஸ் நிறுவனமும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பைஜு நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் தனது வீட்டையும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான வீட்டையும் அடைமானம் வைத்துப் பணத்தைத் திரட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாகவும் சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் காணப்பட்டு வருகிறது. நிதி, செலவீனங்களை கட்டுப்படுத்த மிகப்பெரிய நிறுவங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஐடி ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைவர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.