கொங்குநாடு கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையம் சார்பில் “பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளும் மரபறிவு நுட்பங்களும்”  என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

பழங்குடிகளின் மரபார்ந்த பாடலுடன் துவங்கப்பட்ட இக்கருத்தரங்கின் தொடக்கவிழாவில் தமிழ்த்துறைத் தலைவர் அரிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து, கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் வாசுகி  தலைமையுரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை தனது சிறப்புரையில், இன்றைய காலத்தில் பழங்குடிகளின் பண்பாடுகளையும், அறிவுமுறைகளையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வலியுறுத்தினார். தொடர்ந்து, பேசிய அவர் “பழங்குடி மக்களின் தேவையை அறிந்துகொண்டு அதனைப் பூர்த்தி செய்யவேண்டும்” என்றார். மேலும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி மற்றும் புதுதில்லி இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் குழு முதுநிலை ஆய்வுத் தகைஞர் மகேஷ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கவிழாவின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பிரியா நன்றியுரையாற்றினார்.

தொடக்க  விழாவை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பேராளர்கள் பேசினர். அதோடு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பழங்குடித் தலைவர்கள்  தங்களது மரபார்ந்த வாழ்வியல் முறை குறித்த கருத்துக்களை பங்கேற்பாளர்களோடு பகிர்ந்து கொண்டனர்.