அந்தமான் சென்டினல் தீவு போல்..தமிழகத்தில் ஓர் கிராமம்!

tamilnadu tribal people in thengumarahada

அந்தமானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் கடினம். அவர்கள், வெளி உலக தொடர்பை விரும்பாத பழங்குடியினர். அப்படியான, ஒரு தீவு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..?

ஆம், நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமம்தான் அது. ஈரோடு மாவட்ட எல்லையில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இருக்கிறது தெங்குமரஹாடா. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்துக்கு செல்ல வேண்டுமேயானால் பவானிசாகர் வழியாக அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். இந்த கிராமத்து வனத்துறையினர், எல்லா மக்களையும் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை. அந்த கிராமத்தில் உறவினர்கள் உள்ளவர்கள் மட்டுமே, முன் அனுமதியுடன் கிராமத்திற்குள் செல்ல முடியும்.

இங்கு ஒரு நாளைக்கு 2 அரசு பேருந்துகள் இயங்குகின்றன. கிராமத்துக்கு குறுக்கே மாயாறு ஓடுகிறது. அதனால், கிராமத்துக்கு அருகே வரை பேருந்துகள் செல்கின்றன. அதன்பின், தெங்குமரஹாடா-வுக்குள் நுழைய பரிசல் மூலமே போகமுடியும். அதுவும், தண்ணீர் வரத்துக் குறைவாக இருக்கும் சமயத்தில் மட்டுமே முடியும். இந்த கிராமத்தில் சுமார் 497 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் கிராமம் இருப்பதால், யானைகளின் வலசை பாதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, மாயாற்றில் முதலைகள், வனத்திற்குள் சிறுத்தைகள் மேலும் அதிக அளவில் புலிகள் இருக்கின்றன. எனவே, இந்த கிராமத்தை முற்றிலும் வனப்பகுதியாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர். மேலும், இங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றி மறு குடியமர்வு செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தெங்குமரஹாடா மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இங்கு வசிக்கும் 370 குடும்பங்கள் மறு குடியமர்வுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சில குடும்பங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாகக் கூறப்படுகிறது.

கோடநாடு காட்சி முனையிலிருந்து சிறு தீவு போல் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கும் இந்த தெங்குமரஹாடாவில் இயற்கையுடன் ஒன்று கலந்து வனத்திற்குள் வாழ்ந்துவரும் பழங்குடியின வாசிகள், நகர்ப்புற மக்களிடத்தில் பிரமிக்க வைக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.