கூட்டுறவு வீட்டு வசதித்துறை சார்பில் இ-சேவை மையம்

கோவை, வடவள்ளி, நவாவூரில் கூட்டுறவு வீட்டு வசதித்துறை சார்பில் 58 தொடக்கக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இ-சேவை மையம் வியாழக்கிழமை துவக்கப்பட்டது.

இம்மையத்தை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்து, பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.

இதில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டு வசதி) பாஸ்கரன், மண்டலக்குழு தலைவர்கள் தெய்வயானை தமிழ்மறை, மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் குமுதம் குப்புசாமி, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையக் கூடுதல் பதிவாளர் – செயலாட்சியர் தேவகி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,

கூட்டுறவு வீட்டுவசதி துறையில் பதிவாளர் (வீட்டுவசதி) கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் தலைமை சங்கமாகவும், 1172 தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களும் இயங்கி வருகின்றன.

தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் தலையாய நோக்கமான மனைத்திட்டங்கள் செயல்படுத்துதல், வீட்டுவசதி கடன்கள் வழங்குதல் ஆகியவற்றுடன் அவ்வப்போது அரசின் சீரிய திட்டங்களை உறுப்பினர்களாகிய பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இச்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கூட்டுறவு வீட்டுவசதி துறையின் தலைமைச் சங்கமான கூட்டுறவு வீட்டுவசதி இணையத்துடன் 832 தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரசு இ-சேவை மையங்களும் தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலமாகத் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் வருவாய்த்துறை, பதிவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்,  அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், கட்டணங்கள் செலுத்துதல், மின் மயமாக்கப்பட்ட அனைத்து வகையான சேவைகள் உள்ளிட்ட கணினி மயமாக்கப்பட்ட சேவைகள் மக்களுக்கு வழங்க இயலும்., எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  முத்துசாமி பேசும் பேசுகையில்

கூட்டுறவு வீட்டு வசதித்துறை சார்பில் 2023-24 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 58 தொடக்கக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இ-சேவை மையத்தைத் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையிடமிருந்து பயனர் குறியீடு கடவுச்சொல் பெற்றுச் செயல்படுத்தப்படும் 84 வகையிலான சேவைகள் அனைத்தையும் கடைக்கோடி பகுதியில் வாழும் மக்களிடத்திலும் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் செயல்படும் 58 தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் தெரிவு செய்யப்பட்டு அரசு இ-சேவை மையங்கள் துவக்கப்பட்டுள்ளது.

மேலும், 4 கூட்டுறவு மருந்தகங்கள், 3 அரசு சிமெண்ட் விற்பனை மையங்கள் போன்ற இதர வருமானம் ஈட்டக் கூடிய வியாபார நடவடிக்கைகளையும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன எனத்  தெரிவித்தார்.