ராமகிருஷ்ணா கல்லூரியில் துவங்கியது ‘செவ்வுயிர் இரத்த தானத் திட்டம்’

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வுயிர் இரத்த தானத் திட்டம்  மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், கோவை மாநகர தெற்கு கோட்ட துணைக் காவல் ஆணையர் சண்முகம், பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரகதீஷ்வரன் மற்றும் நாகராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இரத்த தானத்திற்கான பிரத்யேக செவ்வுயிர் இரத்தத்தானத் திட்டத்தினை சிறப்பு விருந்தினர் சண்முகம் துவக்கி வைத்து பேசியதாவது,  நான் காவல்துறையில் உயர் பொறுப்புகளை பெறுவதற்கு என் பள்ளி நாட்களில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் பங்காற்றியது தான் மிக முக்கிய காரணம். நாட்டு நலப்பணித்திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் கல்லூரியில் பயிலும் காலங்களில் கல்வியோடு மட்டும் நின்று விடாமல், சமூகம் சார்ந்த சிந்தனைகள் வளர்வதற்கும் நாட்டு நலப்பணித்திட்டம்  உறுதுணையாக இருக்கும்.

மாணவர் பருவம் எளிதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. நமது எண்ணங்கள் தடம் மாறாமல் சரியாக பயணிப்பதற்கு நாட்டு நலப்பணித்திட்டம் உதவும். குழுவாக செயல்படுதல், திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சமூக அக்கறையுடன் செயல்படுதல் ஆகியவை இங்கு வளர்வதற்கான சூழல் முழுமையாக உள்ளது. மாணவர்கள் தங்களை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கோவை மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதில் இக்கல்லூரி முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து மாணவர்கள் சமூகத்திற்கு தங்களது சேவையை வழங்கிட வேண்டும்., என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒவ்வொரு யூனிட்டுக்குமான மாணவத் தலைவர்கள் மற்றும் செயலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து, மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.