இந்துஸ்தான் கல்லூரியில் ஹெலோபோட்ஸ் ’23 கண்காட்சி

இன்கர் ரோபாட்டிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம்.

நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஹெலோபோட்ஸ்’23’ எனும் தொழில்நுட்ப கண்காட்சி கோவை இந்துஸ்தான் சர்வதேச பள்ளி வளாகத்தில் துவங்கியது.

எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பங்கள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஆகஸ்ட் 15 முதல் 31–ந்தேதி வரை நடைபெற உள்ள இக்கண்காட்சியை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன் முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தொழில்துறை மற்றும் மனித உருவ ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, 3டி பிரிண்டர்கள், ட்ரோன் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் என நவீன மற்றும் எதிர்கால வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மனித உருவ ரோபோக்கள் முதல் போக்குவரத்துக்கான மேம்பட்ட ட்ரோன் டாக்சிகள் வரையிலான பல்வேறு சாதனங்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். நவீன தொழில்நுடபங்களை உள்ளடக்கிய இந்த கண்காட்சியை மாணவர்கள் மட்டுமல்லாது, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையை சேர்ந்த எராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இதில் இன்கர் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கேஜெட்களை வெளியிட உள்ளது.

இக்கண்காட்சி துவக்க விழாவில் இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகுல் பி பாலச்சந்திரன், இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் டி.ஆர்.கே சரசுவதி, ட்ரோன் வேர்ல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.