தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 77வது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களை துணைவேந்தர் ஆய்வு செய்தார். துணைவேந்தர் பேசுகையில், புது வாழ்விற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவுகளை நினைவு கூர்ந்தார். வேளாண் சமூகத்தின் நலனுக்காக இந்த ஆண்டு வெளிவந்த அறிவியல் வெளியீடுகள், 23 புதிய பயிர் வகைகள் மற்றும் 10 பண்ணை தொழில்நுட்பங்களை வெளியிட்டு விவசாய நிறுவனங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 5வது இடத்தையும், மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் 2வது இடத்தையும் பிடித்ததற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சிகளை பாராட்டினார்.

பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகளில் நிபுணத்துவம், ஆராய்ச்சி குறிப்பாக உயிரி தொழில் நுட்பம், நானோ தொழில்நுட்பம், தொலை உணர்வு, உணவு தொழில் நுட்பம், துல்லிய விவசாயம் அதிக அடர்த்தி நடவு முறைகள் போன்றவை விவசாய பெருமக்களுக்கு அதிக வருமானம் ஈட்டுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும் இந்திய பொருளாதாரம் முதன்மை நிலையை அடைய முன் முயற்சிகளை எடுப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும் “தற்சார்பு இந்தியா” பற்றியும் தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தார். இந்தியா விவசாயம் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைக் காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி மாணவர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு துணைவேந்தர் பரிசுகளை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.