தமிழகத்திலேயே பெரிய திரையுடன் கோவையில் ‘எபிக்’ திரையரங்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து ‘எபிக்’ தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேகஸ் திரையரங்கத்தை அறிமுகம் செய்துள்ளன.

1990 காலகட்டங்களில் கோவை சினிமா நகரமாக இருந்தது. அப்போது பட்சிராஜா உள்ளிட்ட சில ஸ்டுடியோக்களும் கோவையில் இருந்தன. அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கோவையில் படம்பிடிக்கப்பட்டன.

மேலும், தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் தான் முதல் முறையாக சினிமாவிற்கு என்று ஒரு அரங்கம் அமைத்து, அதில் வள்ளி திருமணம் போன்ற திரைப்படங்களும் வெளியிடப்பட்டன. நாட்கள் செல்ல செல்ல  சென்னை சினிமா தலைநகரானது. தமிழகத்தில் ஐமேக்ஸ் போன்ற நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் திரையரங்குகள் சென்னையில் தான் முதலில் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கோவையிலும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரையரங்குகள் துவங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் காண்போரை பிரம்மிக்க வைக்கும் விதமாக ‘எபிக்’ என்ற தொழில் நுட்பத்துடன் இயங்கும் தமிழகத்திலேயே திரையை கொண்ட திரையரங்கை க்யூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து கோவையில் துவங்கியுள்ளன. கோவை விமான நிலையம் அருகே 9 திரைகளுடன் துவங்கப்பட்டுள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் இந்த தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா மாநிலத்தில் இந்த வசதியுடன் கூடிய திரையரங்கம் துவங்கப்பட்டிருந்தது.

பிராட்வே சினிமாசில் ‘எபிக்’ திரையரங்கானது 70 அடி அகலம் 37 அடி உயரம் கொண்டது. பெரிய திரை, துல்லியமான காணொலி, பார்க்கோ புரோஜெக்ட்டர் மற்றும் 425 இருக்கையுடன் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவையில் ஐ-மேக்ஸ் திரையும், சொகுசு வசதியுடன் கூடிய கோல்டு திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமான திரையரங்குகளில் 2:35 என்ற விகிதாச்சாரத்தில் திரை இருக்கும். இந்த திரையரங்கில் 1:89 என்ற விகிதாச்சாரத்தில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் போது பிரம்மாண்டத்தை உணருவதோடு மற்றும் துல்லியமான படக்காட்சியையும் காண முடியும் என்று திரையரங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும், பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் ஒரே நேரத்தில் 1,200 கார்களை பார்க் செய்ய முடியும் என்றும், ரூ.360 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

“தமிழகத்திலேயே பெரிய திரை நம்ம கோவைக்கு வந்தாச்சு.. சட்டுன்னு கெளம்புங்க ஒரு படத்த பாத்துட்டு வருவோம்..”