தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக வெள்ளிக்கிழமை  கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) மதிப்புமிக்க சர்தார் படேல் சிறந்த நிறுவன விருது மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2023 தரவரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. அதே சமயம், சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம், அதி நவீன ஆராய்ச்சியால் ஈர்க்கப்பட்ட புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், துடிப்பான கற்றல் சூழலை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர் செந்தில் அவையோரை வரவேற்று, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை விவரித்தார். இரு நிறுவனங்களுக்கிடையில் உள்ள பொதுவான ஆராய்ச்சி ஆர்வங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் குறித்து விவாதித்த தரப்பினர், மாணவர்களின் பயிற்சி மற்றும் தரமான முதுகலை ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக நீண்ட கால ஒத்துழைப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். வேளாண் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள காலநிலை ஆராய்ச்சி & முன்னறிவிப்பு மாதிரியை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கான துல்லியமான பருவகால முன்னறிவிப்பு மற்றும் கூட்டு பாடத்திட்ட உருவாக்கம் ஆகியவை அவற்றுள் சில.

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், ‘இயற்பியல் துறையுடன் இணைந்து, ஆவியாகும் இரசாயனங்களை அளவிடுவதற்கு மின்-மூக்கு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை விவரித்தார். பெரியார் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையை முன்னேற்றுவதற்குத் துணை புரியும் வகையில், உயிர்த் தகவலியல் துறையில் வேளாண் பல்கலைக்கழகத்தின் அனுபவத்தை முக்கிய மூலக்கூறு அடையாளம் காணுதல், மருந்து வடிவமைப்பு மற்றும் மாடலிங் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்’ என தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் ஆகியோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் நலனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பு பிரதிநிதிகளும் இக்கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.