கொங்குச்சீமை செங்காற்று – 10

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

அண்ணன் எங்கு போய்விட்டு இப்படி வந்து சேர்ந்திருக்கிறானென்பதைச் சுப்பையனும், செல்வராசுவும் ஓரளவு யூகித்துத் தெரிந்து கொண்டனர். மனைவியோடு ஏற்பட்ட வீணான மனஸ்தாபத்தில்தான் ராத்திரி எங்கோ போய்ச் சுற்றிவிட்டு வந்திருக்கிறானென மாசய்யனும், முருகம்மாளும் எண்ணினர்.

“நாமளும் அந்த மனுசனெ அத்தென கடுப்பாச் சிடுத்திருக்கக் கூடாது.

மனம் தணிந்தவளாக நாகரத்தினம் அவனிடம் அனுசரணையோடு நடந்துகொள்ள முற்படுவது தெரிந்தது.

சுப்பையனுக்குப் பெண் பார்க்கப் போகிற நாளும் ஜோசியரை வைத்துப் பஞ்சாங்கம் பார்த்து முடிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் போய்விட்டு வந்தால் பிறகு திருமண நாளைத் தேர்வு செய்ய வேண்டியது தான்!

சற்றுத் தூரத்தில் பாட்டுச் சப்தம் கேட்டது.

“முக்கா மொழம் நெல்லுப்பயிறு…

முப்பது கெஜம் தண்ணிக்கெணறு…!

நிக்காமத்தான் தண்ணி எறச்சேன்

நெல்லுப் பயிரும் கருகிப் போச்சு…!

 

தக்காளி நட்ட வருசத்திலே

தண்ணி கொறஞ்சது கெணத்திலே

தண்ணி இருக்குற வருசத்திலே

தக்காளிக்கும் விலை இல்லே…!

 

காட்டெத் திருத்திக் கெணறுவெட்டி

கத்தரிநட்டும் காயக்கலே….!

கடனே வாங்கிச் சோளத்தைப் போட்டா

காலா காலத்தில் மழையில்லே…!

 

மூணுமணிக்குக் கம்மியாக் கூட

மோட்டார் ஓட்டத் தண்ணியில்லே

மூணாரெண்டாப் பிரிச்சுப் பாத்தா

முழு நெலத்துக்கும் பாயலே…”

 

மனம் விட்டுப் பாடிக் கொண்டிருப்பவரைப் பார்த்து மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

“இருக்குற நெலமையை ஒளிவு மறைவில்லாமச் சொல்லிப் போட்டீங்க.”

“கஷ்டங்களை மறச்சு வெச்சுக்கிறதுனால ஒரு பிரயோசனமும் இல்லையேப்பா.”

“அது நெசந்தானுங்க.”

“ச் செரி…ச்செரி.”

பேசிக் கொண்டிருக்கையில் இவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணி வந்தது அவருக்கு ஞாபகத்துக்கு வந்து விட்டது.

“…என்னப்பா உனி கூடிய சீக்கிரத்துல மாப்புளெக் கோலத்துல உன்னெப் பார்க்கப் போறோம்! கண்ணாலத்துக்கும் பிற்பாடு ஆடுக மேய்க்கவெல்லாம் வரமாட்டயல்ல! இந்த ஒரு பட்டி ஆடுகளையும் ஒண்ணா யேவாரிக்கு வித்துப் போடுவீங்கன்னு சொன்னாங்களேப்பா நெசமா..?

மஞ்சிப் பள்ளத்துத் தோட்டத்துக் காளியப்பன் சாதாரணமாகத்தான் கேட்டார்.

“அப்பிடியெல்லாங் கெடையாதுங்க மாமோவ்! எப்பவுன்னாலும் செரி! மந்திரி பதவி கெடைச்சாலும் இந்தத் தொழிலெ கையுடுறதோ.. இல்லே இதைய மறந்து போட்டுப் போறதோ இல்லைங்க…! ஏன்னா இது பரம்பரைத் தொழிலுங்க…”

“அது வாஸ்தவந்தா! ஆரு இல்லேன்னு சொல்றம்… இப்ப காலம் போற வேகத்துக்கு அவனவன் ஒரே பறவாப் பறந்துட்டு பொழப்புமேல பொழப்பைத் தேடீட்டுத் திரியறதுகளெ வெச்சுத்தா உன்னெயும் கேட்டேன்.”

“…இந்த வாயில்லா ஜீவனுகளெ காடாமேடா ஓட்டிட்டுப் போயி வயிறாரப் பசியாத்தி கட்டுத்தறி கொண்டாந்து சேர்த்தினா எம்மட பசி தீந்தாப்ல இருக்குது. காலாறச் சுத்தியலஞ்சாலும் அதுல ஏதோ…பாட்டுக்குத் தக்குன பலனும் இருக்கத்தானெ செய்யுதுங்க.

“நீயும் உங்க அய்யனும் இப்பிடி நெனைக்கிறீங்க. ஆனா உன்ர பொறந்தவமாருகளுக்கு இது புடிக்கலையாட்ட மிருக்குது. வந்த வெலைக்குப் புடுச்சு வித்துப் போட்டு கெடைக்கிற காசெ வெச்சு எதுனாலு செய்யிலாம்னு ஒரு ஓசுனெயிருக்குமாட்டந் தெரியுது.”

காளியப்பனின் பேச்சிலிருந்து மட்டுமல்ல! தன்னுடைய அண்ணன் தம்பிகளுக்கு இப்படியொரு எண்ணம் இருப்பதையும் இவனும் அறிவான்.

என்றாலும், தம்பி செல்வராசுவை முழுக்கவும் அப்படிப்பட்ட கணக்கில் சேர்த்துவிட முடியாது என்றும் உள்ளுக்குள் நம்பிக்கை இருந்தது.

கல்லூரிக்குச் செல்லாத நாட்களில் “நா வேணும்னாலும் இதுகளை ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வர்ரேன்…! நீ ஊட்லெ இரு சின்னண்ணா” என்று அவனே முன் வந்து கேட்பான்!

நோய்நொடி கண்டு, ஆடுகள் சிரமப்படுவதைக் கண்டால் கால்நடை மருத்துவரைக் கூட்டி வந்து வைத்தியம் செய்து சரிபடுத்துவான்.

அண்ணனுக்கு இந்தத் தொழிலின் மேல் உள்ள அக்கறையைச் சரிவர உணர்ந்தவன் அவனென்பதைக் கூட மாட இருந்து உதவுவதை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

“பச்சபாளித் தோட்டத்துக் கோனாரு மக ஒருத்தி என்னெப் பாக்குறப்பவெல்லாம் உன்னெப் பத்தியேதா கேக்குது ராசு.”

..என்று தன் தம்பியிடம் அக்கறையோடு சொன்னான் சுப்பையன்.

“ஓ…! ஆமாண்ணா. குனியாமுத்துர்ல நா ஹை ஸ்கூல் படிப்பு படிக்கிறப்ப எங்கூடப் படிச்ச பொண்ணு அது. சரோஜினின்னு பேரு.”

ஆமாமா! அப்பிடின்னுதா சொல்லுச்சு! நல்ல எதார்த்தமான புள்ளையாட்டந்தா தெரிஞ்சுது.

“மேற்கொண்டு படிக்கிலைங்க. இப்பத் தோட்டத்து வேலையெத்தா பாத்துட்டு இருக்கறனுங்க’ அப்பிடின்னு சொல்லுச்சு! அட இப்பத்தான் ஞாபகம் வருது பாரு. எனக்கு! என்னமோ அப்ளிகேஷன் ஒண்ணு போடுறதுக்கு உன்னெப் பாத்துக் கேக்கோணும் அப்பிடின்னு சொல்லுச்சு ராசு.”

“…ம்…! அப்பிடியண்ணா! என்னதுன்னு தெரியிலையே.”

“அடுத்தவாட்டி நா பாத்தாக்க என்ன ஏதுன்னு குறிச்சுக் குடுக்கச் சொல்லி வாங்கியாறேன்.”

சுப்பையன் குறிப்பிட்டுச் சொன்ன அந்தத் தோட்டம் மலையடி வாரக் காடுகளுக்கும் வடக்கில் பள்ளத்துப் படுகையில் இருக்கும் நாலைந்து தோட்டங்களில் ஒன்று! மழை நன்றாகப் பெய்யும் காலங்களில் அந்தப் பச்ச பாளிப்பள்ளத்தில் ‘ஒரு கபிலை’ அளவுக்குத் தண்ணீர் சராங்கமாகப் போய்க் கொண்டிருக்கும். பண்டம் பாடிகள் குடிப்பதற்கும் மேட்டாங்காடுகாரர்கள் வேளாண்மைச் சமயங்களில் உபயோகிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

வேசை காலங்களிலும் அந்தப் பள்ளத்து மணலில் ஊற்றுப் பறித்தால் தண்ணீர் கிடைக்கும். மழை மாரி இல்லாமல் போகும் போது அந்தப் படுகை வறட்சிக்கு ஆட்படும். முன்பெல்லாம் நடை தடமாகக் கணுவாயை நோக்கிப் போகிறவர்களுக்குப் பயன்பட்டு வந்தது.

“…எட்டிப் புடுச்சாப்ல எட்டிமடை நவக்கரை சாவடி போறதுன்னா இதுலதானெ போயிட்டு வந்துட்டு இருந்தோம். அந்தப் பக்கத்துக் ஏரியாக் காரங்களும், இங்கெ ஓரமபறைக்கும் மத்த சோலிகளுக்கும் வர்றதுன்னா இந்த தடத்துலதான் வந்துட்டுப் போவாங்க. மதுக்கரைக்கும் பேர்ல வாளையாதுக்குப் போகுற தார்ரோடு அதுக்கும் பொறகு வெள்ளக்காரங்காலத்துல போட்டதுங்க. மிலிட்டரி கேம்பு போட்டு மதுக்கரைல இருந்த சமயத்துலதான் அடுத்த ரோட்டுலெ ஜீப்புகளும் லாரிகளும் வுட்டதுங்க.”

வீரண்ண கவுடர்க்குப் பழைய நினைவுகளின் சுவடுகள் பசுமையாக மனதில் இருந்தன. அவசியப்படும்போது அவைகளை எடுத்துச் சொல்லுவார்.

“….இப்ப என்னோட வயிசுக்காரங்க குளத்துப்பளையத்துல ஜாஸ்தி இல்லை! வந்தும் போயி கல்கட்டு ஊடுகதர்வேட்டி அய்யன் சேந்து கெணத்து ஊடு பொன்னுத்தாயி இவக ரெண்டு பேரும் என்ர தண்டி..”

“…அவிகளுக்கும் இப்ப நடை தளுங்கிப் போச்சுங்கய்யா! ஊட்டோட செரி! வெளிப்பக்கம் எங்கேயும் வர்றது இல்லெ! உங்களவுக்கு ஆள் தொணையில்லாம இப்பிடிப் போயிட்டு வர்றதெல்லாம் முடியாதுங்க..”

சுப்பையன் சொன்னதை ஒரு வித நெகிழ்ச்சியான மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவராகத் தலையை அசைத்தபடி…

“உங்க அய்யங்காரனே ஏர்ப்புடிக்கிறதுல இருந்து வண்டிவாசி ஓட்டிப்பழக்குனது வெரைக்கும் நாந்தானப்பா…” என்றார் அவர்.

(தொடரும்)