கொங்குச்சீமை செங்காற்று – 11

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

பாப்பம்பட்டிக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்திருந்தனர். போயிருந்தவர்கள் எல்லோருக்குமே பெண்ணை மனசுக்குப் பிடித்துவிட்டது.

“…சுப்பயனுக்கு ஏத்த பொண்ணு! இத்தனை நாள் தாமுசமானது கூட இப்படிப்பொருத்தமானது அமைய வேணுங்கறதுக்காகத்தா”… என அபிப்ராயப்பட்டனர்.

தனது சம்மதத்தையும், “பெரியவுங்க பாத்து மனசார முடிவு பண்ணினது” என்கிற எண்ணத்தையும் சுப்பையன் சொல்லிவிட்டான்.

“பொண்ணூட்ல இருந்து கண்ணாலத்தை எப்ப வெச்சுக்கிலாம்கிறதைப் பத்தி பேசறதுக்கு நாள் குறிச்சு சொல்லிவுடுறதை இவிக எதிர்பார்த்துவிட்டு இருக்குறாங்க”.

பரவலாகப் பேச்சு இப்படியிருக்க…அங்கிருந்து தகவல் வருவது தாமதமானது.

“ஆராச்சும் ஒருத்தரெ  அனுப்பிச்சு என்ன நெலவரங்கிறதைப் பாத்துட்டு வரச் சொல்லுலாமா…?”

என்று மாசய்யன் கருத்துச் சொன்னார்.

“எதுக்கும் பொறுத்துப் பாக்கலாம்“.

முருகம்மாவின் மனது இப்படிக் கருதியது என்றாலும். “எதுனாலெ இப்படி தாமுசமாகுது?” என்பது கேள்விக்குறியாக நின்றது.

“யாராச்சும் போயி பொடிகிடி தூவிப்போட்டு வந்துட்டாங்களோ என்னவோ..!”

“ம் … அப்படியும் நடந்திருக்கலாம் யாரு கண்டவிக…”

“நல்லதை ஒருத்தரு நெனைச்சா…பொல்லாததை நெனைக்கிறதுக்கு இன்னொருத்தறரு இல்லாமயா போனாங்கொ…?”

தங்களுக்குள் உருவான இத்தகைய சந்தேகங்களை தங்களுக்குள்ளாகவே பரிமாறிக் கொண்டிருந்தனர்.

பல்லடம் சந்தைக்குப் போயிருந்த பாலுத்தொரைக்கு பாப்பம்பட்டியிலிருந்து வந்த மாட்டு வியாபாரி ஒருத்தர் மூலமாக இதைச் சார்ந்த சங்கதியொன்று அகப்பட்டது.

“..மாப்பிள்ளெயப் பத்தியோ, அவிக பொறந்தவமாருகளெப் பத்தியோ தப்பொண்ணும் சொல்ல முடியாது. அய்யனும் அம்மாளும் பரவால்லதானாமா! ஆனாலும், பொண்ணூட்டுகாரங்க மனசுல நாகரத்தினத்தைப் பத்தித்தா பயத்தைத் தூக்கிப் போட்டிருக்காங்க”.

“அவகிடெப் போயி சாதுவான கொணம் உள்ள உங்க புள்ளெ தாக்குப் புடிக்க முடியாதுங்க! அவ பெரிய ஜமீன் ஊட்லெ இருந்து வண்டி வண்டியா சீரு செனத்தியோட வந்து எறங்குனவளாட்டம் எதையும் எடுத்தெறிங்சு பேசுறவ! உங்க புள்ள அங்கெ போயி அவகிட்ட சிக்கினாப் போச்சு  வேலகாரியாட்டந்தா பண்ணிப் போடுவா.”

என்பதுதான் அது…!

இதை அவனும் ஊர் திரும்பிய சூட்டோடு வீரண்ணகவுடர் காதில் கொண்டு போய்ப் போட்டுவிட்டான். அவர் மனந்தளரவில்லை.

“சொல்றவிக ஆயிரத்தெட்டைச் சொல்லுட்டும்ங்க  அவிக இதுக்கெல்லாம் மசிய மாட்டாங்கனு மாசய்யனும் நம்பிக்கையாத்தானெ சொல்லுறான்…”

என்று முருகம்மாவைத் தேடி வந்து பேசினார். “அய்யாமலைக்கங்குல மின்னுச்சினா படைக்கால்ல தண்ணி நிற்குற அளவுக்காச்சு மழை பெய்யாமப் போகாது. அதேபோல நம்ம சுப்பையனுக்குன்னு ஆண்டவன் முடிச்சுப் போட்டிருந்தான்னா தன்னைப்போல அது நடந்திடும்.”

தேறுதலான அவரின் வார்த்தைகள் பலித்தது போன்று “கல்யாண நாள் குறித்து விடலாம்“ என்னும் செய்தி வந்து சேர்ந்தது.

இவர்களின் உள்ளங்களைச் சாந்தப்படுத்தியது

ஆட்டுப்பட்டி பெரியதாக இருந்தால் ஒருவனே அதைப் பராமரிப்பது சுப்பையனுக்குச் சிரமமாகத்தான் ஆகி வந்தது.

“ரெண்டு ஆளாச்சும் கூடமாட இருந்தாத்தானெ இத்தன உருப்பிடிகளையும் மேய்ச்சுக் கொண்டாற முடியும். இந்த ஏரியாவுல பட்டியடைக்கிறதுனாலும் ஒரு ஆளு அதுக்கானு ஜோலிகளெப் பாத்துட்டு இருக்கோணும். மேக்கெ  ஆலந்தொறை செம்மேடு வரைக்கும் கெடுவு முறையா பட்டி போடுற தோட்டத்தொடிக்காரங்களெப் போயிப் பாத்துப்பேசி முடிச்சுட்டு வர வேனும்.

மனதில் அது தொடர்பாக அடுத்தடுத்துக் கவனிக்க வேண்டிய காரியங்கள் அத்துபடியாக இருந்தன.

பட்டிப்படல்களைப் பராமரிப்பதிலிருந்து ஆடுகளுக்கு நோய்க்கெடுதிகள் வராமல் காப்பது வரையிலுமான கவனிப்பு வேலைகள் உண்டு. வருசத்தில் பாதி நாட்களுக்கு மேல் கிடைபோடும் இந்த வேலையானது கிடைக்காமலே கூடப் போய்விடும். சில தடவை மாற்றி மாற்றி இடையே இல்லாமல் வந்து கொண்டிருக்கும். இரண்டு மூன்று மாசங்கள் கிடைபோடும் பணி இல்லாமல் போகும் போது அத்தனை ஆடுகளையும் ஒரு சேர வீட்டுக்குக் கொண்டு வந்து அடைத்து வைப்பதிலும் இடர்பாடுகள் வீட்டுக்குக் உண்டாகும்.

இதைத் தவிர்க்க, குறைவான தொகைக்கும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு கூப்பிடுக்கிற இடங்களுக்குச் செல்ல முடியாது. வருமானம் கட்டுப் படியாகாது. மாதக் கணக்கில் மெனக்கெட்டு இருபது ஏக்கரா முப்பது ஏக்கரா என கிடைபோட்டு முடிந்த பிறகு “பணம் இப்ப பத்தாக் கொறைய இருக்குது. அடுத்த வருசம் குடுத்தர்றோம்! எங்க பேர்ல நம்பிக்கை இல்லையா” என மெத்தனம் பண்ணி விடுபவர்களும் அதிலே இருக்கத்தான் செய்தனர்.

“அது கண்டு வாரத்துக்கொருக்கா கருக்கடையா நின்னு பணத்தை வங்கிடோணும். முடியுமானால் உள்ள செலவு தொந்தரவுகளைச் சொல்லி பாதிப்பணத்தை அட்வான்சாகவே வாங்கிடறது மேலுது.”

என்றெல்லாம் அனுபவங்களை நன்கு படித்திருந்தான்.

குளத்துப்பாளையத்துக்கு வடக்கில் இருந்த வயல்களிலும், தோட்டங்களிலும் மாறி மாறி மாசய்யன் இளந்தாரியாயிருந்த காலந்தொட்டு பட்டி போடுகிற வேலைகள் இருந்தன. அப்பறம் என்னவோ மூட்டை மூட்டையாகச் செயற்கை உரங்களை வாங்கி உழவு முறைகளையும் மாற்றி இவர்களை மறந்து போனவர்களாய் ஆகி வந்தனர் .

சிலர் மட்டும் இன்னமும் கூட விடாமல் இவர்களின் ஒத்துழைப்பைப் பயன்படுத்துபவர்களாய் இருந்தனர்.

 

(தொடரும்)