கொங்குச்சீமை செங்காற்று – 9

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

– சூர்யகாந்தன்

 

கரும்பு சர்க்கரை மூட்டைகளும், விறகுகளும் ஏற்றிக்கொண்டு மலையடிவாரக் காட்டுக்குப் போன வண்டியில் நமச்சிவாயமும் சேர்ந்து கொண்டான். மொண்டி மாரியும் அவன் தம்பி பாலுத்தொரையும் சாராயங் காய்ச்சுகிற வேலையைச் சாப்பு மூப்பாகச் செய்து வருவது இவனுக்கும் நன்றாகவே தெரியும்.

எங்கு செல்லலாம் என்கிற உத்தேசம் எதுவுமில்லாமல் பஸ் ஸ்டேண்டுப் பக்கம் நின்றிருந்தவனை மாட்டு வண்டியில் வந்த அவர்கள் தான் “வா…போகலாம்” எனக் கூப்பிட்டுக் கொண்டு போனார்கள்.

மலையடிவாரத்துக் கணுவாய்க்கு அருகில் அவர்களுக்கும் கொஞ்சமாக நிலம் இருந்தது. ‘ரெண்டு ஏக்கராச் சேரும்’ எனும்படியிருந்த அதில் கிணறு வெட்டத் திட்டமிட்டபோது தான்….அங்கிருந்த ஊற்றுத் தண்ணீர் ‘இப்படியொரு தொழிலைச் செஞ்சுதான் பார்ப்போமே என்கிற யோசனையை உண்டு பண்ணி இப்போது ‘மோசம் ஒண்ணுமில்லை’ எனும்படி வருமானத்தைக் கொடுத்துக் கொண்டுள்ளது.

மில் வேலையைக் கூட வேண்டாமென்று விட்டு விட்டு ஊறல் மனத்தோடும், சாராய வாசனையோடும் வலம் வருகிற அண்ணந்தம்பிகளான அவர்கள் “சரக்குக பூராத்தையும் ஓட்டுக்கா மதுக்கரை ஏரியாவுக்கே அளந்து கொடுத்துப் போடுவோம்ங்க” எனத் தொழில் முறையை வகுத்துக் கொண்டிருந்தனர்.

“பிராந்திக்கடை ஏலத்துக்கு வர்றப்ப நாம கூட்டுச் சேர்ந்து எடுக்கிறதுனாச் சொல்லப்பா நமச்சிவாயா… மூணுபேரும் ஒண்ணு சேர்ந்தே செய்யிலாம்”.

மொண்டி மாரி கேட்டது இவனுக்கு அந்தத் தொழிலின் மீதும் ஆசையை உண்டு பண்ணச் செய்தது. குடிக்கிற பழக்கம் அவ்வளவாக இல்லாதவன். எப்போதாவது மன உளைச்சல் அதிகமாகிறபோது அதிலிருந்து விடுபடுவதற்காக இப்படிப்பட்ட சிநேகிதர்களின் துணையோடு சேர்ந்து கொண்டு குடிக்கக் கூடியவன் அப்படிப் குடித்த பிறகு வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து விடுவான்.

“…..இதையச் சாக்காக வெச்சு சகட்டு மேனிக்குத் திட்டி நொறுக்கிப் போடுவா அவ! சாரயத்துலயே எல்லாப் பணத்தையும் கொண்டு போயித் தொலைச்சுப் போட்டு வர்றவனாட்டம் என்னெப் பேசித் தொலைச்சு போடுவா…!

இவனின் இந்தப் பயம்தான் அதற்க்குக் காரணமாகவும் இருந்தது.

“….மொதல்ல கொஞ்சமாகக் குடிப்பே..! அப்புறம் சீட்டாட்டத்துக்குப் போவே! பொறகு கூத்தியா வெச்சுக்கலாம்னு புத்தி தாவும்! பொண்டு புள்ளைக மறந்து போகும்! ஊட்டுப் பண்டம் பாத்திரங்களெத் தூக்கிட்டுப் போயி அடமானம் வெச்சுக் குடிக்கத் தோணும்…!

அடைமழையின் அடிப்பைப் போல் சரமாரியாக வந்து விழும் அவளுடைய வார்த்தைகள் கொஞ்ச நேரத்தில் ஆளைத் துவைத்து தூக்கிக் காயப் போட்டு விடும்.

முதல் சுற்று இறக்கியதுமே சூடாக டம்ளரில் ஊற்றி ‘எடுத்துக்குடி’ என மொண்டி தான் குடுத்தான். அதன் நெடியே மூக்கில் நுழைந்து தனது வேலையைக் காட்டியது. அந்தச் சூழலும், தனிமையும் தூண்டுதல்களாய் அமைய ‘குடிச்சு நம்ப நாளாகி போச்சு’ என்றபடி டம்ளரைக் கையில் எடுத்தான் இவன்.

“இந்தா மீனுத்துண்டு, எடுத்துக்க! ஊறுகா வேணும்னாலும் இருக்குது. இந்தா..”

ஆகாயத்தை உரசிக் கொண்டு நிற்பது போல் மலையுச்சியில் பாறைகள் மங்கலான நீல நிறத்தில் தெரிந்தன. அவைகளின் இடையில் கட்டிய துண்டுத் துணிகளைப் போல் முகில்களின் கூட்டம் பிசிறு பிசிறாக நகர்ந்தபடியிருந்தன.

பாலுத்தொரை, சாராயத்தை டியூப்பில் ஊற்றிக் கட்டுவதில் கவனமாயிருந்தான். பிளாஸ்டிக் கேன்களில் அளந்து வியாபாரிகளுக்குத் தனியாக சரக்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

சாராய அடுப்புக்கு அடுத்திருந்த மண் மேட்டில் திருகு கள்ளிகளும், மலங்கிளுவைப் புதர்களும் அடர்ந்திருந்தன. அதிலிருந்து செங்காடையாகக் குருவிகளின் சப்தம் விட்டு விட்டுக் கேட்டது. கற்றாழைத் தூர்கள் நெருக்கமாக வளர்ந்திருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் “தவக்களைப் பாறை” மேற்குப் பார்த்து ஒரு குட்டி யானையின் உயரத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. மழை பிடிக்கும் தருணங்களில் நனையாமல் அதன் வயிற்றுப் பகுதியில் தங்கிக் கொள்ளலாம். ஆடு மாடு மேய்ப்பவர்கள் வெய்யிலுக்கு இளைப்பாறுவதர்க்கும் அங்கு இடமுண்டு.

கணுவாய்க்கு இறக்கத்தில் இருந்த மொடமாத்திக் காட்டிலிருந்து நரிகளின் ஊளைச் சப்தம் ஒலித்தது. “குள்ளா நரிக! அதுக இந்தப் பக்கம் வராதுக. எங்கியாச்சும் மொசலுகளைக் கண்டிருக்கும். அதுக்கு இப்பிடி ஊளையிடுதுக! இங்கெ தீ எரியுறதாலெ பெரு நரிகளுங்கூட  கிடடத்தால வராதுக..!

மொண்டி மாரி அடுப்பெரித்தவாறே அளவாகக் குடித்துக் கொண்டான். “அரக்கெலாசு! மீறிப் போனா முக்காக் கெலாசு! அதுக்கும் மேலே போகவே மாட்டேன். பத்துக்க. “நிதானந்தவராதவனாய் அவன் தொழிலில் அக்கறையோடு இருந்தான்.

“…குரும்பருகனா அந்தக் காலத்துல குறியாடுகளெ மேய்ச்சுட்டு நாடோடிகளாட்டந் திரியிறவிகன்னு நம்ம சாதியெப்பத்தி மித்தவிகளுக்கு ஒரு எளக்குனாட்டம் இருந்துச்சு! இப்பவெல்லாம் அதுக மலையேறிப்போச்சு.”

“….நம்ம ஊட்டுக்குக் குடிக்க வர்ற கோவைப்புதூர் போலீசுக… அப்பிடிக்கப்பிடியே கன்னடத்தைப் பேசப் பழகீட்டாங்க. அவிக சொல்றாங்க..! வடக்கெ கர்நாடகாவுல மைசூர் முச்சூடும் கன்னடந்தானாமா…!”

“…ஆமாம் பின்னெ! இங்கியாட்டவா? வந்தும் போயி நம்ம கொளத்துப்பாளையம்… இதைய வுட்டா மேக்கெ பச்சாபாளையம், தீத்திபாளையம், குப்பனூரு… இங்கியெல்லாமு நம்ம குரும்புக் கவுண்டருக நெறக்கவே இருக்காங்களே.”

“….அப்புறம் சென்னனூரு, கரடிமடை இதுகளையும் நீ வுட்டுப் போட்டியே! அங்கியும் ஊருக்கு முக்கால்வாசிப் பேருக நம்மளோட சனங்கதான்.”

“… ஆமா! இதையக் கேளு. வடக்காலூருக் கவுண்ட மாருக இந்த மலையடிவாரத்துலயே மேக்கெ வெள்ளக் குட்டராயன் திண்டுக்குப் பக்கத்தாலே மூணாம் வருசம் அடுப்புப் போட்டு தண்ணி காச்சுனாங்க. அவிகளோட எனக்கு இந்தச் சாதி விசியத்தெப் பேசி சின்னச் சடுத்தமுங்கூட வந்துடுச்சப்பா..! எப்பிடின்னு கேளு சொல்றேன்.”

பாட்டிலில் இருந்து மறுபடியும் ஒரு டம்ளர் சாராயத்தை ஊற்றிக் கொண்டே பாலுத்தொரை இவர்களைப் பார்த்தான்.

“சொல்லுங்க.. கேக்கறேன்..”

“….நீங்கெல்லாம் கவுண்டமாருக இல்லே! நாங்க தான் கவுண்டருக. நீங்கெல்லாம் குரும்பருக அப்பிடின்னானுக. எனக்கு வந்துச்சு எக்கமா எரிச்சலு! அப்ப நாங்க குரும்பக் கவுண்டருகன்னு ஒத்துக்கிறயல்லோ அப்பிடின் னேன்..”

“….செரியாத்தா கேட்டிருக்கீங்க..”

“…மேல கேளு. கவுண்டருகன்னு மொறமை கொண்டாடாதீங்க! கவர் மெண்டே உங்க சாதியை ‘கவுடர்’ன்னு அரிதி பண்ணீருக்குது, அப்பிடின்னானுக. செரி. இருக்கட்டுமே! உங்க கவுண்டருக்கு எங்க ‘கவுடர்’ங்கறது ஒண்ணும் கொறஞ்சதில்லே. கம்னு உங்க பாட்டே ஒழுக்கமாப் பாருங்க! அப்பிடின்னு வெடுக்னு கெட்டுப் போட்டேன்.”

“செரித்தான்..”

“அதுக்கும் பொறகு அலுப்ப சுலுப்பமாவெல்லா எம்மடகிட்டே முண்டமாட்டாங்க..”

வேலை முடிகிற தருவாயை எட்டிக் கொண்டிருந்தது. மேலே அண்ணாந்து பார்த்தான் நமச்சிவாயம். இன்னமும் போதை தெளியவில்லை. நீலம் பாரித்துக் கிடந்த வான்வெளியில் நட்சத்திரப் பொட்டுகள் கண்சிமிட்டுவது மங்கலாகத் தெரிந்தது.

“என்ன! பேசப்பேச ஆளு படுத்துட்டேயாட்டமிருக்குது! செரிச்செரி.”

தங்களுடைய வேலையை முடித்த பின்னர் ஊறல் டிரம்களுக்கெல்லாம் பாதுகாப்புப் பண்ணிவிட்டு சாராய டியூப்களை வண்டியில் ஏற்றினார்கள். சோளத்தட்டுக் கோம்பிலிருந்து பத்து பனிரெண்டு கற்றைகளை உருவிக் கொண்டு வந்து அவற்றை வண்டியில் பரப்பி ‘சரக்கு’ வெளியே தெரியாமல் பதனப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பும்போது கிழக்குத்திசை வெளுக்கத் துவங்கியிருந்தது.

ஆள் நடமாட்டம் ஆரம்பிப்பதற்குள் ஊர்போய்ச் சேர்ந்து விடலாம். வியாபாரிகள் அங்கு வந்தே வாங்கிக் கொள்வர். மலையடிவாரத்தை ஒட்டியே வருகின்ற இட்டேரித் தடத்தில் மதுக்கரையிலிருந்து மேற்கே வந்தால் ‘எட்டிப் பிடித்தாற்ப்போல்’ லகுவாக இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கிய கையோடு சரக்கை அளந்து அவர்களுக்கு அங்கேயே விற்றுவிடலாம். இன்றைக்கு ஏனோ ஆட்கள் வரவில்லை. அதனால் தான் சரக்கு முழுவதையுமே ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டியதாய்ப் போயிற்று.

 

(தொடரும்)