பீக்ஹவர், நிலை கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிப்பு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் ஆகியோர் சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் எண்ணற்ற குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் மின்கட்டன உயர்வால் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஜாப்ஆடர்கள் மற்றும் உதிரிபாகங்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றோம். மின்சார நிலை கட்டணம் பெரும் சுமையாக குறுந்தொழில் முனைவோர்களுக்கு உள்ளது.

வெறும் 8 சதவீதம் கூட லாபம் இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கும் குறுந்தொழில்கள் இந்த நிலை கட்டண உயர்வால், தாங்க முடியாத சுமையில் உள்ளனர். பல்வேறு தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் குறு, சிறு தொழில்களை பாதுகாக்க 112 கிலோ வாட்வரை ஏற்கனவே இருந்தது போல் நிலைகட்டண உயர்வை திரும்பப்பெற்று கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக குறைத்து குறு சிறு தொழில்களை தாங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு, பீக்ஹவர் கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டுகிறோம்.

எவ்விதமான கணக்கிடும் மீட்டர்கள் இல்லாத நிலையில் குறுந்தொழில் முனைவோர்கள் மொத்தமாக பயன்படுத்தும் மின்சார அளவை கணக்கிட்டு அதில் 8 மணிநேரத்துக்கு பீக்ஹவர் கட்டணமாக 15 சதவீதம் கூடுதலாக மின்கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது கடும் தொழில் நெருக்கடி இருந்து வரும் நிலையில் இந்த பீக்அவர் கட்டணத்தை திரும்ப பெற்று குறு, சிறு தொழில்களை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.