கோவையில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

சர்வதேச போதை ஒழிப்பு தினம், வருடந்தோறும் ஜூன் 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான், மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியை அடைந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் முடிவடைந்தது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கேரள டிஐஜி அஜீத்தா பேகம், சதீஷ் பினோ ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கேரள டிஐஜி அஜீத்தா பேகம், சதீஷ் பினோ  உட்பட காவல்துறை துணை ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னதாக இதில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது.