தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஸ்சுவீடிஷ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஸ்வீடன், வேளாண் அறிவியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இதன் நோக்கம் பொருளாதாரம், மேம்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகளை வழங்குவதாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) மதிப்புமிக்க சர்தார் படேல் சிறந்த நிறுவன விருது மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2023 தரவரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

கல்வி ஒத்துழைப்புக்காக இருதரப்புகளும் பரஸ்பரம் கைகோர்க்க விழைந்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் இடையே ஜூன் 22ஆம் தேதி வியாழக்கிழமை, முதுகலைப் பட்டதாரி மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பரிமாற்றம் ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தாவர வளர்ப்புத்துறை ஆராய்ச்சியாளர் செல்வராஜூ கனகராஜன் ஆகியோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நலனுக்கான இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர் செந்தில் அவையோரை வரவேற்று, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை விவரித்தார். பல்கலைக்கழக அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனர் ரவிகேசவன், அன்பில் தர்மலிங்கம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் வன்னியராஜன், துணைவேந்தரின் தொழில்நுட்ப மற்றும் தனி அலுவலர் சிவக்குமார் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்ப பேராசிரியர் மற்றும் தலைவர் கோகிலாதேவி ஆகியோர் இக்கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.