கோவையில் பாம்பே சர்க்கஸ்.. என்ன இருக்கு பார்க்கலாம் வாங்க..!

கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர்  ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ மீண்டும் வ.உ.சி பூங்கா மைதானத்தில்  ஆரம்பமானது. இதில் 30க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களால் கண்டு மகிழப்படும் புகழ் பெற்ற கிரேட் பாம்பே சர்க்கஸ்  102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள சர்க்கஸ் நிறுவனங்களில் இந்த நிறுவனம் மட்டும் தான் தென் ஆப்பிரிக்கா, துபாய், பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் அழைக்கப்பட்டு அந்நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது.

கோவை மாநகரில் பலமுறை நிகழ்ச்சிகளை நடத்தி இங்கு மக்களின் ஆதரவைப் பெற்ற இந்நிறுவனம் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வ.உ.சி மைதானத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தியது.  இந்த  நிலையில்  6 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் தனது சாகச நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது பாம்பே சர்க்கஸ்.

தினமும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இதில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். இதில் கோமாளிகள், நடன கலைஞர்கள், எத்தியோப்பியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சாகச வீரர்கள் கலந்து கொண்டு 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டி அசத்தினர்.

வன விலங்குகளை சர்க்கஸ் சாகசத்தில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதால் நாய்கள் மற்றும் பறவைகளைக் கொண்டு சாகச நிகழ்ச்சிகளை செய்தனர். மரணக்கிணறு என்று அழைக்கப்படும் கூண்டுக்குள் பைக் ஓட்டும் சாகச நிகழ்ச்சியும் இதில் இடம் பெற்றிருந்தது.

குட்டி குட்டி கோமாளிகள், நெட்டைக்கால் மனிதர், பளு தூக்கும் வீரர், சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர், பறந்தபடியே நடனமாடும் ஜோடி என ஒவ்வொரு சர்க்கஸ் கலைஞரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தனர்.

பாம்பே சர்க்கஸ் நுழைவு கட்டணம் ரூ.100 முதல் ரூ 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.