கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை பதிவேற்ற சமூக வலைதளம் உருவாக்கம்

கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை பதிவேற்ற, பிரத்யேக சமூக வலைதள பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், ஆசிரியர்களின் திறமைகள், கலைத் திருவிழாவில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை, ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை’ என்ற பெயரில், பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ஆகியவற்றில் பதிவேற்றப்படுகிறது. இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்களின் திறமைகளும், வெளிச்சத்திற்கு வருவதோடு, அங்கீகாரம் கிடைக்கிறது.

இதை கோவை மாவட்டத்திலும் மேற்கொள்ளும் வகையில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் திறமைகளுக்கு, மேடை ஏற்படுத்தி தர, கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டரில் பிரத்யேக ஐ.டி., உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி கூறியதாவது, பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கலைதிருவிழா, வினாடி-வினா, சிறார் திரைப்பட போட்டி, வானவில் மன்ற போட்டிகள் நடத்தி, மாநில அளவில் தகுதிபெறுவோர், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதுபோன்ற திறமையான மாணவர்கள், ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், அரசுப்பள்ளிகள் மீதான கவனத்தை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள், உடனடியாக பதிவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.