பழங்குடியின மாணவர்கள் முதுமலை அடர் வனப்பகுதியை சுற்றிப் பார்த்தன.

கோவை மே 23-

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாக உள்ளனர். இதுதவிர வனவிலங்கு வேட்டை தடுப்பு, தீ பரவல் தடுப்பு மற்றும் பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பழங்குடியின மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி பழங்குடியின மாணவர்களை அடர்வனத்திற்குள் சுற்றுலா அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி மசினகுடி, ஆனைப்பட்டியை சேர்ந்த 40 பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அவர்கள் யானை சவாரி மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்வனத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

10 கி.மீ சுற்றளவுக்கு சென்ற மாணவ-மாணவிகள், காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், யானை உள்பட பல்வேறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு களித்து உற்சாகம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் சரணாலய அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், மாணவ-மாணவிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

அப்போது மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பாம்பு, பறவைகள் ஆகியவற்றின் உருவங்களை களிமண்ணால் வடிவமைத்து அசத்தினார்கள். மேட்டுப்பாளையம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் முதல்முறையாக பழங்குடியின மாணவ- மாணவிகள் யானை சவாரி மூலம் காட்டை சுற்றிப்பார்த்த சம்பவம், அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.